ஔவை நடராஜனுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவு

ஔவை நடராஜனுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழறிஞர் ஔவை நடராஜன்(87) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், இறுதிச்சடங்கு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழறிஞரும், பேச்சாளருமான ஔவை நடராஜன் 1936 ஏப்ரல் 24- அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரில் தமிழறிஞர் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமை கொண்டவர் ஔவை நடராஜன்.

மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். இவரது தமிழ்ப்புலமையால் ஈர்க்கப்பட்ட தமிழக முதல்வர் எம்.ஜி. ஆர். இவரைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். 1992 முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழ்ப் பணிகளுக்காகப் பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் பெற்றிருக்கிறார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகச் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஔவை நடராசன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்ததினர்.

மறைந்த தமிழறிஞர் ஔவை நடராஜன் தமிழ் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல் துறை மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in