பாஜக மாவட்ட துணைத்தலைவர் கைது... அதிரடி காட்டிய போலீசார்!

கல்யாண சுந்தரமூர்த்தி, பாஜக நிர்வாகி
கல்யாண சுந்தரமூர்த்தி, பாஜக நிர்வாகி

கல்யாண சுந்தரமூர்த்தி என்ற பெயரை வைத்துக் கொண்டு, மூன்று திருமணம் செய்து கல்யாண மன்னனாக வலம் வந்த திருவள்ளூர் மாவட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரமூர்த்தி என்கிற எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). சிப்ஸ் டீலர்ஷிப் எடுத்து ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளில் விநியோகித்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். பின்னர் அக்கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் தற்போது பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு நளினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2017ம் ஆண்டு தேவிகா (36) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, முதல் மனைவியான நளினியைப் பிரிந்து, தேவிகாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். கணவரின் இந்த செயலால் மனவுளைச்சலுக்கு ஆளான முதல் மனைவி நளினி, இதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சுந்தரமூர்த்திக்கு பாஜக மகளிர் அணியை சேர்ந்த ஜெனிபர் என்பவருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து, அவர் கடந்த ஜூலை மாதம் ஜெனிபரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதை அறிந்த அவரது 2வது மனைவி தேவிகா கடந்த வாரம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கல்யாண சுந்தரமூர்த்தி என்ற எஸ்.கே.எஸ் மூர்த்தியை போலீஸார் கைது செய்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு மகளிர் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி சுந்தரமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்தார். இதையடுத்து, அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பாஜக மாவட்ட துணைத் தலைவர் மூன்றாவது திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in