
தங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்திற்கும் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் இடங்களை ஒதுக்கிய திமுக தலைமை, காங்கிரஸுக்கு மட்டும் ஒரு மேயர் பதவி இடத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது. முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கும் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை திமுகவினர் மிக ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில் அதனை காங்கிரஸுக்கு திமுக தலைமை தாரை வார்த்திருப்பது அங்குள்ள திமுகவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் எதிர்பாராத வகையில் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். மொத்தம் நான்கு இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது ஜாக்பாட் தான். அதிலும் ஆட்டோ ஓட்டுநரான க.சரவணன் (42) என்பவரை மேயர் வேட்பாளராக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது உண்மையில் மாநகர மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாட்சி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சேர்ந்த கந்தசாமியின் மகன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது நகர துணைத் தலைவராக உள்ளார். சொந்தமாக ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வரும் இவர், முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் கூட்டணிக்கு மேயர் பதவி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் மேயர் பதவியை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் தமிழழகனுக்கு கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழழகனை துணை மேயராக அறிவித்துள்ளது திமுக தலைமை.