கட்சி கட்டுப்பாட்டை மீறிய திமுக சேர்மனின் பண பேர ஆடியோ லீக்

பாலமுருகன் தன் மனைவியை நகராட்சித் தலைவராக்கிய வெற்றிக் களிப்பில் (கோப்புப் படம்)
பாலமுருகன் தன் மனைவியை நகராட்சித் தலைவராக்கிய வெற்றிக் களிப்பில் (கோப்புப் படம்)

கட்சி கட்டுப்பாட்டை மீறி, தேனி நகராட்சித் தலைவராக வெற்றிபெற்ற ரேணுப்பிரியா கவுன்சிலர்களை கூட்டத்துக்கு வரவழைப்பதற்காகப் பேசிய பண பேர ஆடியோ லீக்காகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. நகர் செயலாளராக இருந்த பாலமுருகன், தன் மனைவி ரேணுப்பிரியாவை நகராட்சித் தலைவராக்குவதற்காக பல லட்சம் செலவளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வந்ததால், கட்சி கட்டுப்பாட்டை மீறி மனைவியை நகராட்சித் தலைவராக்கினார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் அந்தப் பதவியைவிட்டு விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தும், அவர் பதவி விலகாததால் கட்சியைவிட்டு அவர் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், தேனி நகராட்சியின் முதல் கூட்டம் கடந்த திங்கட்கிழமையன்று நடந்தது. ரேணுப்பிரியா நகராட்சித் தலைவர் பதவி விலகாததால், அதைக் கண்டித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் அந்த கூட்டத்தைப் புறக்கணித்தனர். திமுக கவுன்சிலர்கள் 19 பேரில் 10 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், பாஜக கவுன்சிலர் ஒருவரும் அந்த கூட்டத்தைப் புறக்கணித்தனர். அமமுக, சுயேச்சை மற்றும் நகர் செயலாளரின் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் என்று 11 பேரை வைத்து மட்டும் கூட்டம் நடத்தப்பட்டது.

ரேணுப்பிரியா, திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி
ரேணுப்பிரியா, திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி

ஆடியோ லீக்

இதற்கிடையே, அந்த முதல் கூட்டத்தில் எப்படியாவது அனைத்து கவுன்சிலர்களையும் பங்கேற்க வைப்பதற்காக நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, திமுக கவுன்சிலர்களிடம் பேரம் பேசிய வீடியோ லீக்காகியிருக்கிறது. அந்த ஆடியோவில் நகராட்சித் தலைவருடன் பேசும் கவுன்சிலர் 29-வது வார்டு திமுக உறுப்பினர் சந்திரகலா ஈஸ்வரி என்று கூறப்படுகிறது.

அந்த ஆடியோவில் பேசும் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் தேர்தலில் உங்களுக்கு ஓட்டுப்போட்டால் தருவதாகச் சொன்ன பணத்தை இன்னும் முழுதாகக் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தைத் தரும்வரையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என எல்லா கவுன்சிலர்களும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம் என்கிறார். அதற்கு தலைவர், ஏற்கெனவே கொடுத்துவிட்டோமே என்கிறார். கவுன்சிலரோ, இன்னும் முழுப் பணம் வரவில்லை. மேலும் நகராட்சி வேலைகளுக்கு கமிஷன் பர்சன்டேஜ் பிரிப்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

அதற்கு நகராட்சித் தலைவர், மொத்தப் பணத்தையும் தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டச் செயலாளரிடம் (தங்கத்தமிழ்செல்வன்) கொடுத்துவிட்டோம். துணைத் தலைவர் முடிவு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தரவேண்டிய பணத்தை தருகிறோம் என்று சொல்லியிருந்தோம். தேர்தலின் போது எல்லா திமுக கவுன்சிலர்களுக்கும் சேர்த்து கோடிக்கணக்கில் செலவு செய்தோம். ஆனால் இப்போது எங்களின் பதவியே உறுதியில்லாமல் இருக்கிறது என்கிறார்.

இந்த ஆடியோ, தேனி மாவட்ட திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைவரான ரேணுப்பிரியா தரப்பினர்தான், துணைத் தலைவர் கனவில் இருக்கும் திமுக கவுன்சிலர் செல்வம், மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்துவதற்காக இந்த ஆடியோவை பதிவுசெய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆடியோவில் குறிப்பிட்டுள்ளபடி யாரும் என்னிடம் எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கத்தமிழ்செல்வன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in