'உங்களுக்கு பணம் வேண்டுமானால் லட்சுமியைக் கவர்ந்திழுங்கள்': பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சால் அதிர்ச்சி

'உங்களுக்கு பணம் வேண்டுமானால் லட்சுமியைக் கவர்ந்திழுங்கள்': பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சால் அதிர்ச்சி

உத்தராகண்டில் பாஜக அமைச்சர் பெண் கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தராகண்ட் மாநில அமைச்சரும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினருமான பன்ஷிதர் பகத், சர்ச்சைகளுக்குப் பேர் போனவர். நைனிடால் மாவட்டத்தில் உள்ள கலதுங்கி சட்டப்பேரவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மோடிக்கு எதிராக அடிக்கடி பேசி கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தி வருபவர். ”பிரதமர் மோடியின் பெயரில் வாக்குகளைப் பெறுவது இப்போது நடக்காது. இம்முறை மோடி அலையில் வந்துவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் சட்டப்பேரவை தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெற முடியும்" என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியவர் பன்ஷிதர் பகத்.

தற்போது மற்றொரு விழாவில் இந்து கடவுள்களை அவர் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் பன்ஷிதர் பகத் பேசுகையில், " கடவுளும் உங்களுக்கு உதவி செய்துள்ளார். நீங்கள் புத்திசாலித்தனத்தைப் பெற விரும்பினால், சரஸ்வதியை கவர்ந்திழுங்கள். உங்களுக்கு சக்தி வேண்டுமானால் துர்க்கையை நீங்கள் மகிழ்விக்கலாம். உங்களுக்கு பணம் வேண்டுமானால் லட்சுமியை கவர்ந்திழுங்கள். ஆண்களிடம் என்ன இருக்கிறது" என்று பேசினார்.

பெண் கடவுள்களை கவர்ந்திழுக்குமாறு பாஜக அமைச்சர் பேசிய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in