அதிமுகவை சிதறடிக்கும் நோக்கத்தோடு சில தீய சக்திகள் செயல்படுகின்றன: ஈபிஎஸ் மீது பாயும் வெல்லமண்டி நடராஜன்

அதிமுகவை  சிதறடிக்கும் நோக்கத்தோடு  சில தீய சக்திகள் செயல்படுகின்றன: ஈபிஎஸ் மீது பாயும்  வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

அதிமுகவை பிளவுபடுத்தி சிதறடிக்கும் நோக்கத்தோடு சில தீய சக்திகள் செயல்படுகின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரான வெல்லமண்டி நடராஜன், தற்போதைய ஒற்றைத் தலைமை பிரச்சினையில் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

அவர் நேற்று இரவு ஓபிஎஸ்ஸை சந்தித்து விட்டு திரும்பிய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கட்சியில் முறைப்படி தேர்தல் நடைபெற்று முடிந்து அறிவிப்பு வந்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என்று அறிவித்தாகி விட்டது. துணை ஒருங்கிணைப்பாளர்கள், மற்ற பொறுப்பாளர்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொதுக்குழு கூட்ட வேண்டும் என்ற முறைக்கு 23- ம் தேதி பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென்று ஒற்றைத் தலைமை வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இதற்குப் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். கழகத்தை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு சிதறடிக்கும் நோக்கத்தோடு தீய சக்திகள் உள்ளே நுழைந்திருக்கின்றன.

இரட்டைத் தலைமையே தொடர வேண்டும், அதற்காக ஈபிஎஸ் உடன் கலந்து பேச தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெளிவாகக் கூறிய பிறகும் அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்துவது யார்? இரட்டைத் தலைமையால் சிக்கல் இருந்தால் தலைவர்கள்தான் சிக்கல் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஆனால் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஒரு கும்பல் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேச்சைக் கிளப்புகிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் சுயலாபத்திற்காக மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேச வைத்திருக்கிறார்கள்" என்று வெல்லமண்டி நடராஜன் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in