நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கார் மீது தாக்குதல்: பாஜகவினரை கைது செய்தது போலீஸ்

நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கார் மீது தாக்குதல்:  பாஜகவினரை கைது செய்தது போலீஸ்

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது செருப்பு வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாஜகவினர் 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

மதுரை விமான நிலையம் அருகே நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மதுரை பாஜக மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என 5 பேர் மீது போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செய்யும் நிகழ்வுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று மதுரை விமான நிலையம் அருகே குவிந்தனர்.

அப்போது, இந்நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசு நிகழ்ச்சி என்பதால் இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்" என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிதி அமைச்சரின் காரின் மீது பாஜக தொண்டர்கள் காலணிகளை விட்டு எறிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காலணி எறிந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்னர் அமைச்சரின் வாகனம் அங்கிருந்து சென்றது. தொடர்ந்து, அமைச்சரின் கார் மீது காலணி வீசியவர்கள் குறித்து காவல்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in