
2024 மக்களவைத் தேர்தலில் ஆட்சிக்கு எதிராக மனநிலையை வெல்வதற்கான மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் முன்வைத்தார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களை அணுகினால், "ஆட்சிக்கு எதிரான மனநிலையே இருக்காது" என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு நடைபெற்ற முதல் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன் இதுவே கடைசி முழு அளவிலான பட்ஜெட்டாக இருந்தாலும், இது தேர்தலுக்கான பட்ஜெட் என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை என்று கூறினார். மேலும்,"ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் மீது பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று பட்ஜெட்டிலிருந்து என்ன பலன் கிடைத்தது என்பதைப் பற்றி மக்களிடம் பேசுங்கள். தேர்தலைக் கருத்தில் கொள்ளாமல், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் அணுக வேண்டும். பாஜக இனி ஒரு அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கம்" என்று கூறினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது. மேலும் அதன் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதான 'ஆட்சிக்கு எதிரான மனநிலை' செண்டிமெண்டை முறியடிக்க முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற விரும்பும் "கடினமான" மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 144ல் இருந்து 160 ஆக பாஜக உயர்த்தியுள்ளது. இந்த தொகுதிகளின் அதிகரிப்பின் பெரும் பகுதி பிஹாரில் சேர்க்கப்பட்டுள்ளது. பிஹாரில் நிதிஷ் குமாரின் ஜே.டி.யு கட்சி பாஜகவிலிருந்து விலகி ஆர்ஜேடி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். 2019 தேர்தலுக்கு முன்னதாக இதேபோன்ற பட்டியலை பாஜக தயாரித்து அதன்படி பணியாற்றி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 2014ல் 282 இடங்களில் வென்ற பாஜக 2019ல் 303 இடங்களில் வென்றது.