சின்ன வயதில் எனக்குப் பேச்சு வராது: அண்ணாமலை

சின்ன வயதில் எனக்குப் பேச்சு வராது: அண்ணாமலை
மதுரை கூட்டத்தில் அண்ணாமலை

மதுரை சௌராஷ்டிரா மகளிர் கல்லூரியில் இன்று நடந்த மகளிர் தின விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

இந்தியா எப்போதும் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு. இந்திய பெண்கள் உலக மகளிர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்கு அதுவே காரணம். நாமெல்லாம் இந்தியாவில் வாழ்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இங்கே யார் வேண்டுமானாலும் வாழ்வின் உயரத்தை தொடலாம். அதேநேரத்தில் சில விஷயங்களைச் சரியாக செய்யும்போது மட்டுமே முன்னேற முடியும்.

எனக்குச் சின்ன வயதில் சரியாகப் பேச வராது. தடுமாறித்தான் பேசுவேன். எனது ஆசிரியர்களில் ஒருவரான புனிதா அவர்கள்தான் என் குறையைக் கவனித்து, பள்ளியில் வழிபாட்டு நேரத்தில் மாணவர்கள் முன்னிலையில் என்னைச் செய்தித்தாள்களைப் படிக்க வைத்தார். அந்தப் பயற்சியின் மூலம் என்னை சரியாகப் பேசவைத்தார்.

நமது பிரதமர் மோடி போல பெரிய பதவியில் அமர வேண்டும் என்றால், புத்தகங்களை அதிகமாக வாசிப்பதை வழக்கமாகவும், பழக்கமாகவும் வைத்திருக்க வேண்டும். நான் என் வாழ்நாளில் 20 ஆயிரம் புத்தகங்கள் வரை படித்துள்ளேன். அதில் சில புத்தகங்களை திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். நான் அலுவலகம், வீடு என்று எந்த இடத்தில் இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வைத்திருப்பேன்.

உலகம் முதல் உள்ளூர் வரை உள்ள அனைத்து புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்களில் வாழ்க்கை தத்துவங்கள் நிரம்ப உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் காலத்தில் தெரியாததை தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வேண்டும். இன்றைய இளம் வயதினர் செல்போன், சமூகவலை தளங்கள் மீதான மோகத்தை விட்டு புத்தகங்களை படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in