சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜர்: குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார் திமுக எம்பி ஆ.ராசா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜர்: குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார் திமுக எம்பி ஆ.ராசா

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப்பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் சில நிறுவனங்கள் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு நீதிபதி டி.சிவகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in