மாஜி அமைச்சர் வளர்மதி மீது சொத்துக்குவிப்பு வழக்கு: டிச.4-ல் வாதங்களைத் தொடங்க உத்தரவு!

முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னை உயர் நீதிமன்றம்

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் டிச.4-ம் தேதி தனது தரப்பு வாதங்களைத் தொடங்க வேண்டுமென வளர்மதி தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் ப.வளர்மதி. அந்த 5 ஆண்டு காலத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை நீதிமன்றம் விடுவித்தது.

முன்னாள் அமைச்சர் வளர்மதி
முன்னாள் அமைச்சர் வளர்மதி

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வளர்மதி சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எண்ணிடும் நடைமுறைகள் முடிந்துவிட்ட நிலையில் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறினார்.

மேலும் வழக்கு குறித்த சில ஆவணங்களைப் பதிவுத் துறையிடமிருந்து பெற வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிச. 4-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் வழக்கில் வாதங்களைத் தொடங்க வேண்டுமென வளர்மதி தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in