‘லவ் ஜிகாத் ஒழிய கடுமையான சட்டம் தேவை’: குஜராத்தில் பாஜக குரல்

‘லவ் ஜிகாத் ஒழிய கடுமையான சட்டம் தேவை’: குஜராத்தில் பாஜக குரல்

டெல்லி ஷ்ரத்தா வாக்கர் படுகொலை சம்பவத்தை முன்வைத்தும் குஜராத் தேர்தல் பிரச்சார களத்தில் பாஜக அனல்பரத்தி வருகிறது. இந்த கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, ‘நாட்டில் பரவும் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று குரல் கொடுத்திருக்கிறார் அசாம் முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கட்சியின் மாநில - தேசிய தலைவர்கள் மட்டுமன்றி பெருவாரியாக பாஜக ஆட்சியிலிருக்கும் மாநிலங்களின் முதல்வர்களும் தீவிரமாக களாமிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த சில தினங்களாக குஜராத்தில் முகாமிட்டு, பிரச்சார வியூகங்களை முன்னகர்த்தி வருகிறார்.

தனது பிரச்சார வாதங்களில் ஒன்றாக டெல்லியில் நடைபெற்ற ஷ்ரத்தா வாக்கர் படுகொலையையும் சேர்த்துள்ளார். ’லவ் ஜிகாத்துக்கு ஷ்ரத்தா வாக்கர் இரையாகி இறந்துள்ளார் பரவலான பாஜகவினர் குரலையே சர்மாவும் எதிரொலிக்கிறார். ’அப்தாப் இந்து அல்ல என்பதால் ஷ்ரத்தாவின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோருக்கு எதிராக முடிவெடுத்த ஷ்ரத்தா காதலனை நம்பி டெல்லி வந்தார். ஆனால் அந்த அப்தாப், ஷ்ரத்தாவை கொன்று 35 துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் அடுக்கி வைத்தான். சடலம் வீட்டில் இருக்கும்போதே விரும்பிய பெண்களை வரவழைத்து உல்லாசமாக இருந்திருக்கிறான். ஷ்ரத்தா கொலை என்பது திட்டமிட்ட லவ் ஜிகாத் சம்பவம். நாட்டில் மற்ற ‘ஷ்ரத்தாக்களை’ காப்பாற்ற லவ் ஜிகாத்துக்கு எதிரான கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். நமது சகோதரிகளை காப்பாற்ற இது மிகவும் அவசியம்’ என்று சர்மா உணர்ச்சிகரமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

லவ் ஜிகாத் என்பது, மத மாற்றத்தை நோக்காக கொண்டு பிற மதத்தின் பெண்களை காதலின் பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் வீழ்த்தும் கற்பனாவாதத்தை குறிப்பது. ஷ்ரத்தா - அப்தாப் காதலையும் இந்த லவ் ஜிகாத் என்பதன் கீழாக பாஜகவினர் சேர்த்துள்ளனர். ஷ்ரத்தாவை கொன்ற கையோடு, இந்து பெண்களாக குறிவைத்து அப்தாப் வீட்டுக்கு அழைத்து வந்தது குறித்து போலீஸ் விசாரணையில் வாய் திறந்துள்ளான். இது குறித்தும் அசாம் முதல்வர் சர்மா தனது குஜராத் தேர்தலில் குரல் எழுப்பி வருகிறார். இதற்கிடையே அப்தாப்புக்கு மரண தண்டனை விதிக்குமாறு மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் சில அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in