‘மைதானத்துக்கு வெளியே மட்டையை சுழற்றும் வீரர்’: ராகுலை வாரும் முன்னாள் காங். தலைவர்

குஜராத் பிரச்சாரத்தில் சர்மா
குஜராத் பிரச்சாரத்தில் சர்மா

தனது நடைபயணத்தை காரணமாக்கி தேர்தல் மாநிலங்களுக்கு வெளியாக பிரச்சாரம் மேற்கொள்வதாக ராகுல்காந்தியை, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகடி செய்து வருகிறார்.

இமாச்சல் பிரதேசத்தை தொடர்ந்து குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரங்களை அனைத்து கட்சிகளும் அங்கே முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி கட்சி ஆகிய பிரதான கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. வீடு வீடாக வாக்கு கோரும் மாநில நிர்வாகிகளுக்கு அப்பால் பாஜகவின் தேசிய தலைவர்களும் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சார பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பாஜகவுக்கு போட்டியாக ஆம் ஆத்மியும் களத்தில் சுழன்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரம் இந்த இருவருக்கும் பின்னே சுதாரிப்பின்றி தொடர்கிறது.

மகாராஷ்டிரத்தில் ராகுல்
மகாராஷ்டிரத்தில் ராகுல்

கட்சியின் நட்சத்திர முகமான ராகுல் காந்தி தேசம் தழுவிய ஒற்றுமை பயணத்தில் மும்முரமாக இருக்கிறார். இமாச்சல் பிரதேசத்துக்கான தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் நேரடியாக பங்கேற்கவில்லை. குஜராத் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி வருகையிலும், மாநிலத்துக்கு வெளியே இருந்தபடி பிரச்சார நடவடிக்கையாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவை பாஜக தரப்பில் கடும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதன் வரிசையில் அசாம் முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மாவும் களத்தில் இறங்கியிருக்கிறார். இவர் பிரச்சார களத்தில் ராகுலை குறிவைத்து தாக்கி வருகிறார்.காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் 15 ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகள் வகித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, குஜராத்தின் கட்ச் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது முன்னாள் தலைவருக்கு எதிராக விளாசி எடுத்தார்.

”கிரிக்கெட் பந்தயத்துக்கான அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொள்ளும் வீரர், மைதானத்துக்கு வெளியே நின்றபடி மட்டையை சுழற்றுவது போலிருக்கிறது ராகுலின் குஜராத் பிரச்சாரம். இமாச்சலில் பிரச்சாரத்துக்கு அவர் கேரளாவில் இருந்தார். குஜராத் பிரச்சாரத்துக்கு எங்கிருந்தபடியோ குரல் கொடுக்கிறார். ஆயத்த அறையை விட்டு வெளியேறாத விளையாட்டு வீரர் போல ராகுல் பம்முகிறார்” என்றெல்லாம் வாரி வருகிறார் சர்மா. மேலும் தற்போது விவாதத்துக்கு ஆளாகியிருக்கும் சாவர்க்கர் விவகாரத்தை முன்வைத்தும் ராகுலை சராமாரியாக தாக்குகிறார். “ராகுல் வரலாறு அறியாதவர். வீர் சவார்க்கர் குறித்த அவரது பேச்சு ராகுலின் அறைகுறை மனப்பக்குவத்தை காட்டுகிறது. அவர் இந்து எதிர்ப்பாளர் மட்டுமல்ல தேச விரோதியும் கூட” என்று தாக்கி உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ்காரரான சர்மாவின் பேச்சு, குஜராத் பிரச்சார களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சாவர்க்கர் சர்ச்சையை முன்வைத்து ராகுலுக்கு எதிரான பாஜகவின் வேகமும் கூடியள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in