‘அசப்பில் சதாம் உசேன் போலிருக்கிறார் ராகுல் காந்தி’

தாடியை வைத்து புதிய சாடல்
சதாம் உசேன் - ராகுல் காந்தி
சதாம் உசேன் - ராகுல் காந்தி

‘ராகுல் காந்தியின் புதிய தோற்றம் சதாம் உசேன் போலிருக்கிறது’ என்ற பாஜக தலைவரின் விமர்சனம், காங்கிரஸ் தரப்பில் கண்டனங்களுக்கு ஆளாகி இருக்கிறது.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கே இமாச்சல் பிரதேசத்தின் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சாவர்க்கர் குறித்து ராகுல் விமர்சித்தது முதல் அவரை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார் சர்மா. அந்த வகையில் இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் உசேனுடன் ஒப்பிட்டு தற்போது பேசியிருக்கிறார்.

ராகுல்
ராகுல்

”ராகுல் காந்தியின் புதிய தோற்றத்தில் எனக்கு பிரச்சினை ஏதுமில்லை. ஆனால் தனது தோற்றத்தை மாற்ற விரும்பியவர், சர்தார் படேல் போலவோ, ஜவஹர்லால் நேரு போலவோ அல்லது காந்திஜி போலவோ மாற்ற முற்படவில்லை. மாறாக சதாம் உசேன் தோற்றத்துக்கு ஏன் மாறி வருகிறார்?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் சர்மா, “காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் இந்திய கலாச்சாரத்துக்கு நெருக்கமாக இருப்பதில்லை. அவர்கள் சதா மாற்றுக் கலாச்சாரத்தை கைக்கொள்ளவே விரும்புகிறார்கள்” என்று வாரியிருந்தார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் கண்டிருக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா, சட்டப்பேரவை தேர்தலை பின்தள்ளி மக்களவை தேர்தலை குறிவைத்தே தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் மோடியை முன்னிறுத்தியே அவரது துதிபாடல் தொடர்ந்து வருகிறது. அவற்றுக்கு தோதாக ராகுல் காந்தியை சராமாரியாக சாடவும் செய்கிறார். சர்மா ஒரு முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்பதாலும், அவரது ராகுல் காந்திக்கு எதிரான களமாடலை பாஜக தலைமை வெகுவாய் ரசித்து வருகிறது. இதனால் மேலும் உற்சாகமடைந்திருக்கும் சர்மா, சில தருணங்களில் சறுக்கவும் செய்கிறார்.

சர்மா
சர்மா

சர்மாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் குஜராத் மாநில காங்கிரசார், ”இது சர்மாவின் தரம் தாழ்ந்த போக்கை பிரதிபலிக்கிறது. உங்கள் தலைவர்(மோடி) தாடி வளர்த்தபோது நாங்கள் ஏதாவது சொன்னோமா? காங்கிரசில் எப்போதும் அர்த்தமுள்ள விஷயங்களை மட்டுமே பேசுவோம்” என்று வேகம் காட்டியிருக்கிறது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவரான பூபென் குமார், “சர்மாவுக்கு எப்போதும் தலைப்புச் செய்தியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தணியாத ஆசை. இதற்காகவே ராகுல் காந்தியை குறிவைத்து தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்” என்றும் போட்டு தாக்கியுள்ளார்.

தனது பாரத் ஜோடோ யாத்திரையில் மும்முரமாக இருக்கும் ராகுல் காந்தி இடைவிடாத நடைபயணம் காரணமாக பாதியாக இளைத்து, முகம் மண்டிய தாடியுடன் காட்சியளிக்கிறார். அந்த தாடியும் அதிகம் நரையோடி இருப்பதை வைத்தே, இமாச்சல பிரதேச முதல்வர் சர்மா தற்போது விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in