ஐபிஎஸ் டு அமைச்சரவை: உத்தர பிரதேசத்தில் அசத்திய அசீம் அருண்!

தமிழகத்திலும் தடம்பதிக்கக் காத்திருக்கும் காக்கிச் சட்டைகள்
ஐபிஎஸ் டு அமைச்சரவை: உத்தர பிரதேசத்தில் அசத்திய அசீம் அருண்!

மற்ற துறைகளைப் போலவே, காவல் துறையிலிருந்தும் அரசியலுக்கு வருபவர்கள் உண்டு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், காவல் துறை அதிகாரிகளாக இருந்து அமைச்சர் பதவிவரை செல்பவர்கள் அரிது. அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் அசீம் அருண் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அமைச்சர் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார். இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகளில் உத்தர பிரதேச அரசியல் களத்தில் யாருக்கும் கிடைத்திராத வாய்ப்பை அவர் பெற்றிருக்கிறார்.

ஐபிஎஸ் அதிகாரியாக அசீம் அருண்
ஐபிஎஸ் அதிகாரியாக அசீம் அருண்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளில் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் சேர்வது, 2014 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் இந்தப் போக்கு அதிகம். அந்த வகையில் கான்பூரின் காவல் துறை ஆணையராக இருந்த அசீம் அருண், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் சேர்ந்தார்.

1994 பேட்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அசீம் குமார் அருண், 2021 முதல் கான்பூர் நகர காவல் துறை ஆணையராகப் பணியாற்றிவந்தவர். 5 மாநிலத் தேர்தல் தேதிகள் ஜனவரி 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், காவல் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு கோரியிருப்பதாகவும், நாட்டுக்கும் சமூகத்துக்கும் வேறு வகையில் சேவையாற்ற விரும்புவதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அவரது விருப்பத்துக்கிணங்க கன்னோஜ் தொகுதியில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளித்தது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அனில் தொஹாரேயை அவர் தோற்கடித்தார்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அவருக்கு தனிப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலினப் பிரிவின் ஜாதவ் சமூகத்தைச் சேர்ந்த அவர், பாஜகவில் முக்கியத்துவம் பெறும் இரண்டாவது காவல் துறை அதிகாரியாகிவிட்டார் அசீம் அருண், இவருக்கு முன்பாக உத்தர பிரதேச டிஜிபியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரிஜ் லால் என்பவரும் பாஜகவில் இணைந்திருந்தார். அவரை மாநிலங்களவை எம்.பியாக்கி பாஜக அழகு பார்த்தது.

இந்த இரண்டு அதிகாரிகளுக்கும் முன்பாக உத்தர பிரதேசக் காவல் துறையின் துணை ஆய்வாளராக இருந்த சத்ய பால் சிங் பகேல், 1996-ல் உத்தர பிரதேச அரசியலில் குதித்தார். முன்னாள் முதல்வ்ர் முலாயம் சிங் யாதவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து அவரது சமாஜ்வாதி கட்சியில் சத்ய பால் இணைந்தார். பிறகு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தவர் தற்போது பாஜகவில் உள்ளார். நான்காவது முறை எம்.பியாக இருக்கும் அவர், தற்போது மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார்.

சமீபத்தில் காலமான அகமது ஹசன் எனும் உத்தர பிரதேச மாநில ஐபிஎஸ் அதிகாரியும் சமாஜ்வாதியின் முக்கியத் தலைவராக இருந்தவர். முன்னாள் மாநில அமைச்சரான இவர் கடைசியாக, சமாஜ்வாதி சார்பில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். உத்தர பிரதேச சட்டமன்ற மேலவையில் பதவி வகித்த ஹசன், சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டதில்லை.

ஆனால், பாஜகவில் இணைந்ததுடன் நேரடியாக சட்டப்பேரவையில் போட்டியிட்டு வென்று அமைச்சராகிவிட்டார் அசீம் அருண்.

அசீம் அருணைப் போல் மற்றொரு அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கும் விருப்ப ஓய்வுபெற்று இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். உத்தர பிரதேசத்தின் முதல்நிலை அதிகாரியான ராஜேஷ்வர் சிங், அமலாக்கத் துறையின் இணை இயக்குநராக இருந்தவர். இவருக்கு பாஜகவில் லக்னோவின் சரோஜினிநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதில் வெற்றியும் பெற்றார். அசீமைப் போல் ராஜேஷ்வர் சிங்கும் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனோ அது நடைபெறவில்லை, ராஜேஷ்வர் சிங்கின் மனைவியான லஷ்மிசிங் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

ராஜேஷ்வர் சிங்
ராஜேஷ்வர் சிங்

இதுபோல், கடந்த 25 வருடங்களில் உத்தர பிரதேசத்தில் சுமார் 12 காக்கிச் சட்டைகள் அரசியலில் குதித்துள்ளனர். ஆனால், அசீமை போல் அமைச்சர் வரையிலான உடனடி வெற்றி எவருக்கும் கிடைக்கவில்லை. 1972-ம் ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரியான தாராபுரி, ஐஜியாக இருந்து கடந்த 2003-ல் ஓய்வு பெற்றார். பிறகு 2004 மற்றும் 2014 என இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவரால் வெற்றிபெற முடியவில்லை.

இவரைப்போல், 1991-ல் உத்தர பிரதேச சிறப்புப் படையின் டிஎஸ்பியான சைலேந்திர குமார்சிங் தன் பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்திருந்ந்தார். இவருக்கு சண்டவுலியில் 2009, 2012 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் இரண்டு முறை போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தும் வெற்றி கிடைக்கவில்லை. உபியின் டிஜிபியாக இருந்து பாஜகவில் இணைந்த சூர்யகுமார் சுக்லாவிற்கு ஏனோ கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இம்மாநிலத்தில் டிஐஜியாக இருந்த கியான்சிங்கிற்கும் அரசியலில் சேர்ந்த பின்னர் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை.

உபியின் அரசியலில் குதித்த இதர காவல் துறை அதிகாரிகளில் குஷ் சவுரப், தேர்தலில் இதுவரை போட்டியிடவில்லை. மற்றொரு காவல் துறை அதிகாரியான தாவா ஷெர்பா ஐபிஎஸ், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவில்லை. இதற்கு முன்பாக அவர் அளித்த ராஜினாமாவும் ஏற்கப்படாமல் இருந்தது. எனவே, ஷெர்பா மீண்டும் உபி காவல் துறை பணியில் இணைந்து சிபிசிஐடியின் ஏடிஜியாக உள்ளார்.

அதிகாரிகளைத் தடுக்கச் சட்டம்

ஷெர்பாவின் அரசியல் பல்டிக்கு பின், குடிமைப்பணி அதிகாரிகள் அரசியலுக்கு வருவதைத் தடுக்க முயற்சிக்கப்பட்டது. ஓய்வு பெற்று குறிப்பிட்ட மாதங்களுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் சட்டமாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சித்தது. இருப்பினும், பெரும்பாலான அதிகாரிகள் ஆளும் கட்சிகளின் வேட்பாளர்களாகிவிடுவதால், இந்தச் சட்டம் எந்தக் கட்சியின் ஆட்சியிலும் அமலாகவில்லை.

தமிழக அரசியலில் குதிக்க விரும்பும் ஐபிஎஸ் தமிழர்கள்

உத்தர பிரதேசத்தைப் போல், தமிழகத்திலும் வட மாநிலங்களின் பல காக்கிச் சட்டைகள் அரசியலில் குதிக்க ஆர்வத்துடன் உள்ளனர். இவர்களில் சிலர் கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவில் இணைந்து போட்டியிட விரும்பினர். இந்தத் தகவல், சில இளம் திமுக எம்.பி-க்கள் மூலமாகக் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. திமுகவுக்காகத் தேர்தல் வியூகம் அமைத்த பிரஷாந்த் கிஷோரின் குழுவும் அந்த ஐபிஎஸ் அதிகாரிகளை நேர்முகத் தேர்வும் நடத்தி தேர்வு செய்திருந்தது.

எனினும், கடைசி நேரத்தில் மூத்த திமுக தலைவர்களால், கட்சித் தலைமை தன் முடிவை மாற்றிக்கொண்டதாகக் கருதப்படுகிறது. வரும் காலங்களில் தமிழக அரசியலில் தமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என வட மாநிலங்களின் காக்கிச் சட்டைகள் காத்திருக்கின்றன.

Related Stories

No stories found.