'பெட்ரோல் விலை உயர்வுக்கு தாஜ்மஹால்தான் காரணம்' - பரபரப்பை கிளப்பும் ஓவைசி

owaisi
owaisi

ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்றால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாயாக இருந்திருக்கும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் அடித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்கள்தான் காரணம் என பாஜக கூறுவதாக குற்றம் சாட்டிய அசாதுதீன் ஓவைசி, "நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர், பணவீக்கம் அதிகரித்து வருகிறது, டீசல் லிட்டருக்கு 102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உண்மையில் அவுரங்கசீப் தான் இதற்கெல்லாம் காரணம் பிரதமர் நரேந்திர மோடி அல்ல. வேலையின்மைக்கு பேரரசர் அக்பர்தான் பொறுப்பு. பெட்ரோல் விலை உயர்வுக்கு தாஜ்மஹாலைக் கட்டியவர்தான் பொறுப்பு.

அவர் தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்றால் இன்று பெட்ரோல் 40 ரூபாய்க்கு விற்கப்படும். பிரதமர் மோடி அவர்களே ஷாஜகான் தாஜ்மஹாலையும், செங்கோட்டையையும் கட்டித் தவறிழைத்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த பணத்தை அவர் சேமித்து 2014-ல் மோடிஜியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இப்போது ஒவ்வொரு பிரச்சினைக்கும் முஸ்லிம்கள் மற்றும் முகலாயர்கள்தான் பொறுப்பு என்று பாஜகவினர் கூறுகிறார்கள்" என தெரிவித்தார். இந்த வீடியோ ஓவைசியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது.

அசதுதீன் ஒவைஸி
அசதுதீன் ஒவைஸி

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவை மொகலாயர்கள் மட்டும்தான் ஆண்டார்களா? அசோகர் ஆளவில்லையா? சந்திரகுப்த மௌரியர் ஆளவில்லையா? ஆனால் பாஜகவுக்கு முகலாயர்களை மட்டுமே தெரியும். அவர்கள் ஒரு கண்ணில் முகலாயர்களையும், மற்றொரு கண்ணில் பாகிஸ்தானையும் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் முஸ்லீம்களுக்கும் முகலாயர்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை நாங்கள் நிராகரித்தோம், இந்த ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடுவோம். ஜின்னாவின் முன்மொழிவை நிராகரித்து இந்தியாவில் தங்கியிருந்த முன்னோர்கள் என்பதற்கு இந்நாட்டில் உள்ள 20 கோடி முஸ்லிம்கள் சாட்சியாக உள்ளனர். இந்தியா எங்கள் அன்புக்குரிய நாடு. நீங்கள் எவ்வளவோ கோஷங்களை எழுப்பினாலும் நாங்கள் இங்கேயே வாழ்வோம் இங்கேயே சாவோம்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in