கேஜ்ரிவால் தனது அரசு பங்களாவை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவு செய்தார்: பாஜகவின் பகீர் குற்றச்சாட்டு!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்கேஜ்ரிவால் தனது அரசு பங்களாவை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவு செய்தார்: பாஜகவின் பகீர் குற்றச்சாட்டு!

டெல்லி கோவிட்-19 உடன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு பங்களாவை அழகுபடுத்துவதற்கு ரூ 45 கோடி செலவிடப்பட்டது என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அழகுபடுத்துவதற்காக சுமார் ரூ.45 கோடி செலவிடப்பட்டதாக குற்றம்சாட்டிய பாஜக, இதற்காக தார்மீக அடிப்படையில் அவர் ராஜினாமா செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து டெல்லி அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் கிடைக்காத நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய மூத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா, டெல்லி முதலமைச்சரின் இல்லம் 75-80 ஆண்டுகளுக்கு முன்பு 1942ல் கட்டப்பட்டது. எனவே டெல்லி அரசாங்கத்தின் பொதுப்பணித் துறை, தணிக்கைக்குப் பிறகு, அதைச் சீரமைக்கப் பரிந்துரைத்தது எனத் தெரிவித்தார்.

இதுபற்றி மூத்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது புதுப்பிக்கப்படவில்லை, பழைய கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டமைப்பு வந்துள்ளது. இங்கே முதல்வரின் முகாம் அலுவலகமும் உள்ளது. இங்கே புதிய கட்டமைப்பு வந்துள்ளது, ஆனால் பழைய கட்டமைப்புகளும் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது" என்று கூறினார். சிவில் லைன்ஸில் 6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோட்டில் உள்ள கேஜ்ரிவாலின் அரசு தங்குமிடத்தின் "சேர்ப்பு/மாற்று"க்கு மொத்தம் ரூ.44.78 கோடி செலவிடப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன. செப்டம்பர் 9, 2020 முதல் ஜூன் 2022 வரை ஆறு தவணைகளில் பணம் செலவிடப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன.

ஆவணங்களின்படி, உள் அலங்காரத்திற்கு ரூ.11.30 கோடி, கல் மற்றும் பளிங்கு தரைக்கு ரூ.6.02 கோடி, உள்அலங்கார ஆலோசனைக்கு ரூ. 1 கோடி, மின் பொருத்துதல்கள் மற்றும் உபகரணங்கள் ரூ.2.58 கோடி, தீயணைக்கும் அமைப்பு ரூ. 2.85 கோடி, அலமாரிகள் மற்றும் பாகங்கள் பொருத்துவதற்கு ரூ.1.41 கோடியும், சமையலறை உபகரணங்களுக்கு ரூ.1.1 கோடியும் செலவிடப்பட்டது. ரூ. 8.11 கோடி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்துக்குச் செலவிடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கையில், டெல்லி கோவிட்-19 உடன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் கேஜ்ரிவாலின் பங்களாவை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிடப்பட்டது என்று கூறினார். மேலும், "கோவிட் காலத்தில் பெரும்பாலான பொது வளர்ச்சிப் பணிகள் முடங்கியபோது, தனது பங்களாவை அழகுபடுத்துவதற்காக சுமார் ரூ.45 கோடி செலவழித்த தார்மீக அதிகாரம் குறித்து டெல்லி மக்களுக்கு கேஜ்ரிவால் பதிலளிக்க வேண்டும். எனவே அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்யவேண்டும்" என்று கூறினார். பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சதா, "இது ஒரு அரசு விடுதி, இது அர்விந்த் கேஜ்ரிவாலின் சொத்து அல்ல" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in