12ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு தயார்: அமலாக்கத் துறைக்கு கேஜ்ரிவால் பதில்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் வரும் 12ம் தேதிக்குப் பின் விசாரணைக்கு தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தரப்பில் இருந்து அமலாக்கத் துறைக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை
அமலாக்கத் துறை

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, அமலாக்கத் துறை கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக சம்மன்களை அனுப்பி வருகிறது.

இதுவரை கேஜ்ரிவால் அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை, சட்டவிரோதமானது, அரசியல் தூண்டுதல் ஆகிய காரணங்களை குறிப்பிட்டு, நிராகரித்து வந்தார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அமலாக்கத் துறை இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மீது வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 27ம் தேதி அமலாக்கத் துறை 8வது முறையாக கேஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது. அதில், மார்ச் 4ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்த இன்றைய தினம், கேஜ்ரிவால் வரும் 12ம் தேதிக்குப் பிறகு விசாரணைக்கு தயாராக இருப்பதாக அமலாக்கத் துறைக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு ஆம் ஆத்மி சார்பில் அனுப்பப்பட்டுள்ள பதிலில், "கேஜ்ரிவால், மார்ச் 12ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் பங்கேற்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா
சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா

டெல்லியில் மதுபான வணிகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் அம்மாநில ஆம் ஆத்மி அரசு, 2021-22ல் கலால் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன்படி, மதுபான வணிகத்தில் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் நவீன வணிக அனுபவத்துக்கு உறுதியளித்தது.

இந்நிலையில் இந்த கலால் கொள்கை வகுத்ததில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா விசாரணைக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியும், ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கை கடந்த அக்டோபர் 5ம் தேதியும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in