அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீர் சந்திப்பு: அரசியல் களத்தில் பரபரப்பு

அர்விந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன்
அர்விந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன்அர்விந்த் கேஜ்ரிவாலுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் திடீர் சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லியில் உள்ள சாந்தி நிகேதனில் நேற்று சந்தித்தார். மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் மாறிவரும் சூழலில் இவர்களின் திடீர் சந்திப்பு அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் நேற்று டெல்லியில் சந்தித்து ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி தொடர்பான அரசியல் சூழல் குறித்து விவாதித்தனர். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “இன்று டெல்லியில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அர்த்தமுள்ள உரையாடல் நடந்தது” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹேமந்த் சோரன், “ இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்” என தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி இதுவரை பல மாநிலங்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சூழலில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் மாறி வருகின்றன. புதிய கூட்டணிகளை உருவாக்க அரசியல் கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. எனவே இந்த சந்திப்பு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in