‘குஜராத்தில் இத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’ - அடித்துக் கூறும் அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறத் தவறிய ஆம் ஆத்மி கட்சி இந்த முறை 92 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் இன்று குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக மற்றொரு கணிப்பை வெளியிட்டார். அதில் வைர நகரமான சூரத்தில் உள்ள 12 இடங்களில் 7 முதல் 8 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என்றும், தங்கள் கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார். மேலும், குஜராத் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறத் தவறிய ஆம் ஆத்மி கட்சி இந்த முறை 92 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று தனது கணிப்பை ஒரு காகிதத்தில் எழுதி ஊடகவியலாளர்களிடம் காட்டினார்.

கட்சியின் குஜராத் தலைவராக இருக்கும் கோபால் இத்தாலியா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும், ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் கத்வி மற்றும் முன்னாள் படிதார் கோட்டா தலைவர் அல்பேஷ் கதிரியாவும் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று கேஜ்ரிவால் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாநிலத்தில் உள்ள பயம் மற்றும் மிரட்டல் சூழ்நிலையில் இருந்து வணிகர்களை விடுவிப்போம். இலவச மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை நாங்கள் உறுதி செய்வோம். ஆம் ஆத்மியால் மட்டுமே வேலையின்மை பிரச்சினையை தீர்க்க முடியும். அரசு தேர்வு வினாத்தாள்களை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்.

ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே குஜராத்தில் எந்த போட்டியும் இல்லை, நாங்கள் முன்னோக்கி இருக்கிறோம்” என தெரிவித்தார்

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது, வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in