சந்திரசேகர் ராவின் பொதுக்கூட்டம்: அர்விந்த் கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

சந்திரசேகர் ராவின் பொதுக்கூட்டம்: அர்விந்த் கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி (பிஆர்எஸ்) புதன்கிழமை கம்மம் நகரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சிபிஐ தேசிய செயலாளர் டி ராஜா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தனது பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றி தேசிய அளவில் கட்சியை கொண்டு செல்ல முடிவு செய்த பிறகு நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் உள்ளிட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

பிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் மற்றும் வருகை தரும் தலைவர்கள், கம்மம் செல்வதற்கு முன், ஹைதராபாத் அருகே யாதாத்ரியில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயிலுக்கு புதன்கிழமை செல்வார்கள். ஹைதராபாத்தில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள கம்மத்தில், தெலங்கானா அரசின் கண் பரிசோதனை திட்டமான 'கண்டி வெலுகு' இரண்டாம் கட்ட தொடக்க விழாவில் இந்த தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த பேரணி தொடர்பான பாரத் ராஷ்டிர சமிதியின் அறிக்கையில், “ மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் சுதந்திரம் உள்ளிட்ட அரசியலமைப்பின் ஆன்மா தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நீர்த்துப்போகிறது. பிஆர்எஸ் தேசத்தில் "மாற்று அரசியலை" கொண்டு வர முயற்சிக்கிறது” என தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கம்மத்தில் நடக்கும் இந்த பொதுக்கூட்டம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in