
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் உள்ள அனல் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் திருநாவுக்கரசு என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்.எல்.சி நிறுவனத்தில் ஒன்றரை வருடத்தில், மூன்றாவது முறையாக, விபத்து ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், என்எல்சி நிறுவனம் செயல்படுகிறது என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில், ' நெய்வேலி என்எல்சி நிர்வாகம், தொழிலாளர்களை, பாதுகாக்காமல் இருக்கும் காரணமாக, இந்த விலைமதிப்பற்ற உயிரின் இழப்பிற்கும், இந்த விபத்திற்கும், என்எல்சியே பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த 2020-ம் ஆண்டு, இரண்டாவது அனல் நிலையத்தில், அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு விபத்துகளில், ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், என 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அப்போது, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின், சேர்மன் ராகேஷ் குமார், இனிவரும் காலங்களில், இது போல் விபத்து நடக்காது என்று, உயிரிழந்த குடும்பத்தினரிடம் கைகூப்பி, மன்னிப்பு கேட்டார். தற்போது ஒன்றரை வருடத்தில், மூன்றாவது முறையாக, விபத்து ஏற்பட்டு உள்ளது என்பது, தொழிலாளர்களின் உயிர்களின் மீது அக்கறை இல்லாமலும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், என்எல்சி நிறுவனம் இருப்பது அலட்சியத்தின் உச்சமாக தெரிகிறது.
இந்த விபத்துக்கும், மன்னிப்பு கேட்கப் போகிறாரா? என்எல்சி சேர்மன். வருடம் தோறும், கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும்தான், என்எல்சி நிர்வாகம் செயல்படுகிறதா? நிலம் மற்றும் வீடு கொடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து, சொற்ப சம்பளத்திற்காக, வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது, எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லையே ஏன்?
புதிய அனல் மின் நிலையத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அதிக தொழில்நுட்ப வசதியுடன், தொடங்கப்பட்டுள்ளது என என்எல்சி நிர்வாகம் தம்பட்டம் அடித்துக் கொண்டது. ஆனால் தமிழர்களை நம்பாமல், வடமாநில தொழிலாளர்களையும், தனியார் நிறுவனத்தையும் கொண்டு, உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையத்தில், தற்போது விபத்து ஏற்பட்டுள்ளதற்கு நெய்வேலி என்எல்சி நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது?
கடந்த 2020-ம் ஆண்டு, நடந்த விபத்தில், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, சொற்பத் தொகையும், வேலையும் வழங்கியது. அப்படி இல்லாமல் இந்த விபத்தில் உடனடியாக, உயிரிழந்த திருநாவுக்கரசு குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு தொழிலாளிகளுக்கும், தலா 50 லட்சம் நிவாரணமும், தீக்காயத்தால் தொடர்ந்து பணி செய்ய இயலாத பட்சத்தில், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், தொடர்ச்சியாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் ஏற்படும் விபத்துகளில் உயர்மட்ட அதிகாரிகள், தங்களது அதிகார பலத்தால், தப்பித்துக் கொண்டு வருகின்றனர். எனவே தற்போது ஏற்பட்டுள்ள இந்த பயங்கர தீவிபத்து நடைபெற்ற, இடத்தில் பணிபுரிந்த, என்எல்சி உயர் அதிகாரிகள் மீது, வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் இதுபோல், விபத்துக்கள் நடக்காமல் இருக்கும். தொழிலாளர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதியளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி உள்ளார்.