
ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள் எனக் கூறி தமிழக பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவில் அண்ணாமலை மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் புகார்களை கூறி நிர்வாகிகள் விலகி வரும் சூழலில், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்கள் அண்ணாமலைக்கு நெருக்கமாக உள்ளதாக கூறி அக்கட்சியின் பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அண்ணாமலைக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’’ மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு பொருளாதார பிரிவில் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கிறீர்கள்.
கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது. மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை.
இந்த கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்துவிட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சினைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.