நகைக்கடை திருட்டு வழக்கில் மத்திய அமைச்சருக்கு கைது வாரண்ட் - மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!

நகைக்கடை திருட்டு வழக்கில் மத்திய அமைச்சருக்கு கைது வாரண்ட் - மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி!

13 ஆண்டுகளுக்கு முன்பு 2009-ல் இரண்டு நகைக்கடைகளில் நடந்த திருட்டு வழக்கில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக்கிற்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவாரில் உள்ள நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு அலிபுர்துவார் ரயில் நிலையம் மற்றும் பீர்பாரா அருகே உள்ள நகைக்கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்தன. கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சிறப்பு எம்.பி/எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் இருந்து அலிபுர்துவார் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ஜஹர் மஜும்தார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பலமுறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் நிசித் பிரமானிக் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நவம்பர் 11 அன்று நடந்த வழக்கு விசாரணையின் போதும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர்களின் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை குறித்து பிரமாணிக்கின் வழக்கறிஞர் துலால் கோஷ் எதுவும் தெரிவிக்கவில்லை.

வடக்கு மேற்கு வங்கத்தில் வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள தின்ஹாட்டா நகரில் வசிப்பவர் மத்திய இளைஞர், விளையாட்டு மற்றும் உள்துறை இணையமைச்சர் நிசித் பிரமாணிக். தொடக்கத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்த இவர், கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2019-ல் பாஜகவில் சேர்ந்த நிசித், அதே ஆண்டில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in