`கைது செய்து பாருங்கள்'- திமுகவுக்கு அண்ணாமலை விடுத்த 6 மணி நேர சவால்

`கைது செய்து பாருங்கள்'- திமுகவுக்கு அண்ணாமலை விடுத்த 6 மணி நேர சவால்

"அதிமுக அமைச்சர்களிடம் நான் பணம் வாங்கியது உண்மையானால் என்னை கைது செய்து பாருங்கள். 6 மணி நேரம் கமலாலயத்தில்தான் இருப்பேன்" என்று திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியிருந்தார். இதையடுத்து, அண்ணாமலையை எச்சரித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்ட வேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்கள் எடுக்கும் சட்ட நடவடிக்கையை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் கூறியதோடு, 100 கோடி ரூபாய் மானநஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக அமைச்சர்களை மிரட்டி பணம் வாங்கியுள்ளார் என்று கூறியுள்ளார். நான் இன்னும் 6 மணி நேரம் தமிழக பாஜக அலுவலகத்தில் உட்கார்ந்து இருப்பேன். தெம்பு, திராணி இருக்குமானால், உண்மையாக ஆதாரம் இருக்குமானால் கமலாலயம் வந்து என்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால், பாஜக மீது பரப்பப்படும் பொய்களில் இதுவும்கூட ஒரு பொய் என்று ஆகிவிடும். அவர்களைப்போல் கோழைத்தனமாக இந்த கள்ளநோட்டீஸ் கொடுப்பது எல்லாம் எனக்கு வராது. நீங்கள் என்னை கைது செய்யவில்லையென்றால், நீங்கள் சொல்வதை தமிழக மக்கள் இன்று முதல் பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

திமுக எம்பி வில்சன் 10 கோடி ரூபாய் மானநஷ்டஈடு கேட்டு 2-வது தடவையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மொத்தம் திமுக சார்பில் 610 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 610 கோடி ரூபாய்க்கு நான் வொர்த் அல்ல. என்னுடைய மொத்த வொர்த்தே 2 டப்பா வைத்திருக்கேன். ஊரில் இரண்டு ஆடு, மாடு வைத்திருக்கிறேன். வந்து பிடித்துக்கொண்டு போங்க. என்னை சாதாரண மனிதனாக மதித்து 610 கோடி ரூபாய் கேட்டு அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் அனுப்புங்கள், பார்த்துக் கொள்ளலாம்" என்று காட்டமாக கூறினார்.

Related Stories

No stories found.