‘அமித் ஷாவை கைது செய்யவேண்டும்’ - பரபரப்பு கிளப்பும் மணீஷ் சிசோடியா

‘அமித் ஷாவை கைது செய்யவேண்டும்’ - பரபரப்பு கிளப்பும் மணீஷ் சிசோடியா

தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை பாஜகவுக்கு மாற்ற முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் பாஜக தலைமையை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி, பஞ்சாப் மற்றும் பிற எட்டு மாநிலங்களில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ முயற்சி மூலம் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி பாஜகவால் மேற்கொள்ளப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறினார். இது தொடர்பாக பேசிய அவர், “தெலங்கானாவில் இந்த முறை பாஜக ஆடிய ஒரு கெட்ட விளையாட்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாஜகவுக்கு மாறுவதற்காக சில டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் மூன்று நபர்களுக்கு இடையேயான உரையாடல் அடங்கிய ஆடியோ கிளிப் வெளியாகியுள்ளது. அதில் “ஷா ஜி” என்ற ஒருவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. உண்மையில் 'ஷா ஜி' என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்றால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். ஏனெனில், எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கும் புரோக்கர் பிடிபட்டால், அதில் நாட்டின் உள்துறை அமைச்சரின் பெயர் இடம்பெற்றால், அது ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகவும் ஆபத்தானது” என தெரிவித்தார்

கடந்த புதன்கிழமையன்று, தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக ஹைதராபாத் அருகே உள்ள பண்ணை வீட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் வைக்கக் கோரிய போலீஸ் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சி தலைமையும், டெல்லியில் ஆட்சியைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு பாஜக ரூ.20 கோடி வழங்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டினை பாஜக மறுத்துள்ளது.

தெலங்கானா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, “இன்று ஒரு புதிய ஆடியோ வெளிவந்துள்ளது. இதுவும் தெலங்கானா எம்.எல்.ஏ.க்களுக்கும் ஆபரேஷன் லோட்டஸ்க்கும் இடையே நடந்த உரையாடல் என தெரிகிறது. இந்த ஆடியோவின் மூலம் டெல்லியிலும் இதை முயற்சித்ததாக ஒரு சந்தேகம் வெளிப்படுத்துகிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க ரூ. 1,075 கோடி ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்பதுதான் கேள்வி. இது யாருடைய பணம், எங்கிருந்து வந்தது?. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இதனைக் கண்காணிக்க இவ்வழக்கு அமலாக்கத் துறையுடன் இணைக்கப்பட வேண்டும்.

இந்த ஆடியோவில் "பி.எல்" மற்றும் "ஷா ஜி" பற்றிய குறிப்புகள் உள்ளது. இதில் "ஷா ஜி" என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் குறிப்பிடுகிறதா மற்றும் "பிஎல்" என்பது பாஜக தலைவர் பி.எல்.சந்தோஷ் பற்றிய குறிப்பா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in