ராகுல் காந்திக்கு கறுப்புக்கொடி காட்ட வந்த அர்ஜூன் சம்பத் ஓடும் ரயிலில் கைது!

ராகுல் காந்திக்கு கறுப்புக்கொடி காட்ட வந்த அர்ஜூன் சம்பத் ஓடும் ரயிலில் கைது!

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை பொதுக்கூட்டத்துடன் இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் ராகுல் நடைபயணம் செல்வதற்கு எதிராக கொட்டாரம் பகுதியில் கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தார் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத். இந்த போராட்டத்திற்காக கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்னும் பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி. கன்னியாகுமரியில் இன்று மாலை காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கி 600 மீட்டரில் பொதுக்கூட்ட மேடையை வந்தடைகிறார் ராகுல்காந்தி. அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்குகொள்கிறார். 3,500 கிலோ மீட்டர் கொண்ட ராகுல் காந்தியின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருந்தது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் அர்ஜூன் சம்பத் வந்தார். இன்று அதிகாலை ஒரு மணிக்கு திண்டுக்கல் சந்திப்பில் அந்த ரயில் வந்தது. அப்போது அங்குவந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீஸார் அர்ஜூன் சம்பத்தைக் கைது செய்தனர். அவரோடு உடன்வந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதால் வழக்குப்பதிவு செய்யப்படாது எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருநெல்வேலி மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் உடையாரையும் நெல்லை போலீஸார் இன்று காலை கைது செய்தனர்.

’கோ பேக் ராகுல்’ என்னும் கோஷத்தோடு அர்ஜூன் சம்பத் கறுப்புக்கொடி காட்ட முயன்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in