‘அமித் ஷா கோவையில் போட்டியிட வேண்டும்!’

இது அர்ஜுன் சம்பத் ஆசை
அமித் ஷா
அமித் ஷா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கோவையில் போட்டியிட வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் விருப்பம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது தமிழக பாஜக. கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பலரை பாஜகவுக்கு அழைத்து வந்து, அவர்களின் ஆதரவாளர்கள் பலத்தால் கட்சி வளர்ந்திருப்பதாக பெருமை கொள்வது நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் மற்ற கட்சிகளில் ஒதுங்கியிருப்பவர்களை பாஜகவுக்கு இழுத்து வரும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. திரை உலக பிரபலங்களை பாஜகவுக்குள் கொண்டுவரவும், ஆதரவாளர்களாக மாற்றவும் தனியாக முயற்சிகள் நடந்து வருகின்றன.

அந்த முன்னேற்பாடுகளில் முத்தாய்ப்பாக, பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடப் போகிறார் என்பதாகவும் தகவல்கள் இறக்கை கட்டி பறக்கின்றன. அந்த தொகுதியில் இதை வரவேற்றும், எதிர்த்துமாக எதிர்வினைகளும் கிளம்பி இருக்கின்றன. பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்ற தகவலுக்கே இப்படி பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது அமித் ஷாவும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று பேச்சைக் கிளப்பியிருக்கிறார்கள். 

அர்ஜூன் சம்பத்
அர்ஜூன் சம்பத்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்றுப் பேசிய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், அமித்ஷா தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். “தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட வேண்டும். அது போல் மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா கோவையில் போட்டியிட வேண்டும்” என்று அவர்  பேசியுள்ளார்.

இதற்கு பதிலடியாக பொதுவெளியில் கருத்துக்களை பதிவிடுவோர், ‘பிறகு ஏன் பாஜகவில் உள்ள  மற்றவர்கள் வெளி மாநிலங்களில் போட்டியிட வேண்டும்? ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜெய்சங்கர், ஸ்மிருதி ராணி என முக்கிய மத்திய அமைச்சர்களையும் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும்  போட்டியிட வைத்து, தமிழ்நாட்டை காப்பாற்ற முன்வரட்டும்’ என்று பகடி செய்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in