ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக இருக்கிறாரா மதுரை ஆதீனம்?- அர்ஜுன் சம்பத் சொல்வது இதுதான்

ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக இருக்கிறாரா மதுரை ஆதீனம்?- அர்ஜுன் சம்பத் சொல்வது இதுதான்

தமிழக அமைச்சர் ஒருவர் ஆதீனம் மீது பாய்ந்து விடுவோம் என்று அபாயகரமான கருத்தை சொல்லி இருப்பது கண்டனத்துக்குரியது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு தர வேண்டி மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரை ஆதீனம், தற்போது அரசியல்வாதிகளாலும், நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் இன்னபிற சக்திகளாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார். மதுரை ஆதீன மடத்திற்கும், குரு சன்னிதானத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப் போல் நடந்து கொள்கிறார் என்றும், நாங்கள் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் குரு சன்னிதானத்தை அச்சுறுத்தி வருகிறார். இது ஒரு அபாயகரமான போக்கு. மதுரை ஆதீனத்திற்கு அரசியலுக்கும் பெரிய தொடர்பு கிடையாது. அவர் அரசியல் பேசவில்லை.

சிதம்பர நடராஜர் பெருமானை இழிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. திரைப்படங்களில், இந்து மத கடவுள்கள் இழிவுபடுத்தப்படுகிறது. இந்து சமயத்திற்கு ஒரு வில்லங்கம் என்றால் மதுரை ஆதீனம் குரல் கொடுப்பார். அவர், அதிமுக, பாஜகவிற்கு ஆதரவாளராக இருக்கிறார் என்பதெல்லாம் கிடையாது.

எப்பொழுதும் போல மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் வழியிலே தன் பணிகளை செய்து வருகிறார். இந்து சமய அமைப்புகள் அவருக்கு ஆதரவாக உள்ளது. அவர் எல்லா ஆன்மிக சமய அமைப்புகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். அறநிலையத் துறை அமைச்சரே பாய்வோம் என்று சொல்லியுள்ளார். ஆகையால், மத்திய அரசு மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சு.வெங்கடேசன் தொடங்கி வைத்த செஞ்சட்டை பேரணியில் பல்வேறு அருவருக்கத்தக்க கருத்துக்கள் பேசப்பட்டுள்ளது. இது, கண்டனத்துக்குரியது. இதனால், மிகப்பெரிய வருத்தத்தில் உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்-க்கு சாதகமாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு முழுவதும் பொய்யான ஒன்று. அவர், எந்த விதத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லவில்லை. கோயில்களை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என்று ஆதீனம் சொல்லி வருகிறார். இது எப்போதுமே சொல்லப்படக்கூடிய தான். இந்த கருத்து எல்லா காலக்கட்டத்திலும் சொல்லப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்திலும் சொல்லப்பட்டு வருகிறது.

சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம் சொத்து முஸ்லிம்களிடமும், இருக்கின்ற போது ஏன் ஆலய சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். எங்களது உரிமைக் குரலாக ஆதீனம் இருந்து வருகிறார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in