'தமிழகம் திராவிட பூமி அல்ல, தேசிய பூமி என்பதை விரைவில் நிரூபிப்போம்'- அர்ஜூன் சம்பத்

'தமிழகம் திராவிட பூமி அல்ல, தேசிய பூமி என்பதை விரைவில் நிரூபிப்போம்'- அர்ஜூன் சம்பத்

"தமிழகம் திராவிட பூமி அல்ல, தேசிய பூமி என்பதை விரைவில் நிரூபிப்போம். மேலும், வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆவார்" என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

பழநியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கரோனா என்ற கொடிய நோயை உலகம் முழுவதும் பரப்பியது சீனா. பிரதமர் மோடி அரசால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் கரோனா இந்தியாவில் தடுத்து நிறுத்தப்பட்டு, தற்போது விரட்டி அடிக்கப்பட்டு வருகிறது.

மதுக்கடைகளை எதிர்த்தவர்களை தற்போது காணமுடியவில்லை. மதுபான விற்பனையால்தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என நிதி அமைச்சர் கூறுகிறார். வாரிசு அரசியலை ஒழிக்க பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை எழுச்சியுடன் போராடி வருகிறார். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர் பாதயாத்திரை தொடங்கும்போது அவருக்கு எதிராக 'கோபேக் ராகுல்' இயக்கத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும்.

இந்தியாவில் ஒரே நாளில், ஒரே தேர்தல் என்ற நடைமுறை வர வேண்டும். மோடியின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும். தமிழகம் திராவிட பூமி அல்ல, தேசிய பூமி என்பதை விரைவில் நிரூபிப்போம். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமர் ஆவார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in