இந்து - முஸ்லீம் ஒற்றுமையை குலைக்க முயல்கிறீர்களா?

அடுக்கடுக்கான கேள்விகளுக்கு உபி முதல்வர் யோகி பதில்
உபி முதல்வர் யோகி
உபி முதல்வர் யோகி

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லீம்கள் தவிர்க்க முடியாதவர்களாக உள்ளனர். இதனால், இவர்களை வைத்து தன் இந்துத்துவா அரசியலை பாஜக இங்கு தொடர்வது வழக்கமாக உள்ளது. இம்மாநிலத் தேர்தலில் பாஜகவின் வெற்றியுடன், அதன் தோல்விக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் அவசியமாக உள்ளன. இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் உருவாக்க முயற்சிப்பதும் தொடர்கிறது.

இந்தமுறை 7 கட்டங்களாக பிப்ரவரி 10 முதல் தொடங்கும் தேர்தலிலும், முஸ்லிம்கள் சர்ச்சை எழுந்தது. இதன்மீது பாஜக தலைவர்களிடம் பத்திரிகைகளும், ஊடகங்களும் எழுப்பும் கேள்விகள் புதிய சர்ச்சைகளுக்கும் வழிவகுத்து விடுவது உண்டு. இந்தவகையில், பாஜக ஆளும் உபியின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு இந்தி செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியும் இருந்தது. அதில் சில முக்கிய கேள்வி, பதில்கள் காமதேனு இணையதளத்தின் வாசகர்களுக்காக இங்கு அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் வாபஸான பிறகும் விவசாயிகளுக்கு உங்கள் மீதானக் கோபம் தணியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பின் முக்கியத் தலைவர்கள் சிலரும் உங்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். ஜாட் சமூகத்தையும் உங்களால் சமரசம் செய்ய முடியாமல் உள்ளது. இந்தச் சூழலில் நீங்கள் 305 தொகுதிகள் பெற்று ஆட்சி அமைப்பதாகக் கூறுவது சாத்தியமா?

பதில்: நாம் தேசியவாதம் மீது பேசும்போது எதிர்க்கட்சியினர் சமூகவாதிகளாகப் பேசுகின்றனர். அனைவருக்கும் அனைத்து வளர்ச்சிகளும் எனக் கூறும்போது அவர்கள் குடும்பவாதிகளாகப் பேசுகிறார்கள். இம்மாநிலத்தின் சமவளர்ச்சியை பற்றி பேசுகிறோம். இதில், இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள், ஏழைகள் உள்ளிட்ட அனைவரும் இடம் பெற்றுள்ளனர். இதற்கு அவர்கள் ஜின்னாவாதிகளாகப் பேசுகிறார்கள். வேலையில்லா இளைஞர்களுக்கான வாழ்வுக்கு நாம் முயன்றால் அவர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவளித்துப் பேசுகின்றனர். எதிர்க்கட்சிகள் அவசரகதியில் அமைக்கும் கூட்டணி 2014, 2017 மற்றும் 2019 தேர்தல்களில் எனப் பலமுறை தோல்வி அடைந்துள்ளது. இந்தியர்கள் கடந்த 7 வருடங்களாக பாஜக மற்றும் மோடிஜியுடன் உள்ளனர். இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேள்வி: நீங்கள் ஜின்னாவை குறிப்பிட்டீர்கள். இதுபோல் உங்கள் கட்சியினர் அவ்வப்போது பாகிஸ்தானை எதிரியாகக் குறிப்பிடுவதாக அகிலேஷ்சிங் கூறுகிறாரே?

பதில்: மக்களுக்கான வளர்ச்சிகளில் கவனத்தை திருப்புவதற்காக, அவர் ஜின்னா அல்லது பாகிஸ்தான் விவகாரங்களை இடையில் பேசுகின்றார். ஏனெனில், வெறும் வளர்ச்சியைப் பற்றிப் பேசினால் அவர்களது நான்குமுறை ஆட்சிகளின் மீது பொதுமக்கள் கேள்விகளை எழுப்புவார்கள். ஊழல் இல்லாத ஆட்சியை அளிக்க முடியாதவர்களால் இதற்கு பதிலளிக்க முடியாது. இதிலிருந்து தப்பவே அவர் ஜின்னா, பாகிஸ்தான் எனக் கூறி மதவெறுப்புகளை தூண்டி பலன்பெற முயல்கிறார்கள்.

யோகி
யோகி

கேள்வி: அட! இதைப் போன்ற மதவெறுப்பு உணர்வுகளை நீங்கள் தான் தூண்டுவதாக அவர்கள் உங்கள் மீது புகார் கூறுகிறார்கள்?

பதில்: பாகிஸ்தான், ஜின்னா விவகாரங்களை சமாஜ்வாதியினர் தான் எழுப்பினார்களே தவிர நாம் இல்லை. இந்த நாடு, வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடும் போது அவர்கள் ஜின்னாவைப் போற்றி சுதந்திரப்போராட்ட வீரர்களை அவமானப்படுத்திவிட்டனர்.

கேள்வி: ஆக இந்தியர்கள் ஜின்னாவை போற்றக்கூடாது இல்லையா?

பதில்: கண்டிப்பாக இல்லை. ஏனெனில், வில்லனான ஜின்னா நம் பாரதத்தை துண்டாக்கியதன் ஆதாரம். நம் சுதந்திரம் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற உன்னதமானவர்கள் பெற்றுத் தந்தது. ஆனால், வில்லன் ஜின்னா பிரிவினையை தூண்டி, பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட காரணமானவர். இந்தியாவை துண்டாடிய இந்த வில்லனான ஜின்னா இந்த சமாஜ்வாதி கட்சியினருக்கு நாயகனாக இருக்கலாம். ஆனால், தேசியவாதிகளுக்கு அவர் என்றும் வில்லனாகவே இருப்பார்.

கேள்வி: தங்கள் செய்த வளர்ச்சி பற்றிப் பேசாமல், கைரானாவில் இந்துக்கள் பிரச்சினை, முசாபர்நகர் மதக்கலவரம், அயோத்தி ராமபக்தர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு என பழைய சம்பவங்களை நினைவுகூர்வதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறுகிறார்களே?

பதில்: இதற்கு, வளர்ச்சி மீதான விவாதங்களில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள விரும்பாதது பிரச்சினை. காங்கிரஸ் 55 வருடம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு மூன்று மற்றும் சமாஜ்வாதிக்கு நான்கு முறைகள் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்தன. இந்த மூன்று கட்சிகளும் சேர்த்து சுமார் 70 வருடங்கள் உபியில் செய்த ஆட்சியில் வெறும் 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால், பாஜகவின் வெறும் ஐந்து வருடங்களில் 33 மருத்துவக் கல்லூரிகள் திட்டமிடப்பட்டு 17 செயல்பாட்டில் வந்தும்விட்டன. 70 ஆண்டுகால ஆட்சியில் எக்ஸ்பிரஸ்வேக்கள் சுமார் இரண்டு மட்டுமே அமைய, நாம் ஏழுக்கு வழிவகுத்துள்ளோம். 70 ஆண்டுகளில் இரண்டு கி.மீ தொலைவில் மட்டும் மெட்ரோ அமைய, இன்று ஐந்து நகரங்களில் அதை நாம் அமைத்து வருகிறோம். இரண்டு நகரங்களில் மட்டும் அவர்கள் விமானசேவை அமைக்க, நாம் 9 விமான நிலையங்களை நாடு முழுவதிலும் அமைத்து ஒரு சர்வதேச விமானநிலையமும் அமைத்து வருகிறோம். வருடத்துக்கு வெறும் ரூ.33,000 கோடிகளாக இருந்த உபி அரசின் வருமானம் எங்கள் ஐந்து வருட ஆட்சியில், இரண்டு மடங்காக ரூ.75,000 கோடிகளாகி விட்டன. விவசாயிகளுக்கு வெறும் இரண்டு லட்சம் ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. நாம் அவர்கள் வங்கிக் கணக்கில் மட்டுமே ரூபாய் இரண்டரை லட்சம் சேர்த்து விட்டோம். எங்கள் ஆட்சியில் ஒரு மதக்கலவரம் கூட நடைபெற்றதில்லை.

கேள்வி: உங்கள் ஆட்சியில் மதரஸாக்கள் மீது அதிக கவனம் இருந்தது. பிறகு அவைகளுக்கு உபி அரசு உத்தரவிடவும் தொடங்கியது. தியோபந்தில் தீவிரவாதத் தடுப்பு படையின் முகாமை அமைத்தீர்கள். இதற்கு மதரஸாவுக்கும், தீவிரவாதத்துக்கும் தொடர்புகள் இருக்கும் மற்ற சிலரைப் போல் நீங்களும் எண்ணுகிறீர்களா?

பதில்: எந்த ஒரு கல்வியும் நம் சமூகத்தின் ஆதாரத்தில் அமைய வேண்டும். தம் மத சம்பிரதாயங்களை முன்னெடுத்துச் செல்ல அவர்களுக்கு மதரஸா கல்வி அவசியமாக இருக்கலாம். ஆனால், ஒரு நல்ல விஞ்ஞானி, கலைஞர், சமூகவியலாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர், பொறியியலாளர் உள்ளிட்டோராக மதரஸா கல்வியால் ஆக முடியாது. தவிர, மவுலானா, மவுல்வி மற்றும் முப்திகளாக விரும்புபவர்கள் மதரஸாவில் பயிலலாம். ஆனால், எத்தனை பேரை நீங்கள் மவுல்வி, மவுலானா, முப்தியாக்களாக்குவீர்கள்?

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

கேள்வி: மதரஸாவில் மதவாதம் பயிற்றுவிப்பதால் முஸ்லீம்கள் பின்தங்கி விடுகிறார்களா?

பதில்: இதன் மீதான ஆய்வுகள் எங்களுடயது அல்ல தவிர, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அமைப்புகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. ஒவ்வொருவரின் முதல் மதம் தேசியவாதமாகவே இருப்பது அவசியம். ஒருவர் ஜாதி, மத ரீதியில் அன்றி அவரது அடையாளம் தேசியமாக இருக்க வேண்டும்.

கேள்வி: எனவே, ஒருவரது முதல் அடையாளமாக தேசம் இருக்க வேண்டும், அதன் பிறகு தான் மற்றவை என்கிறீர்களா?

பதில்: இதைத்தான் நாம் குறிப்பிட விரும்புகிறோம். நான் முதலில் இந்தியனாகவும் அதன் பிறகு, மற்ற அடையாளங்களில் இருக்க விரும்புகிறேன். இந்தியர் என்பதைவிட பெரிய அடையாளமாக இருப்பதை ஏற்கவே முடியாது.

கேள்வி: நீங்கள் ஒருமுறை 80-க்கு 20 எனக் குறிப்பிட்டது சர்ச்சையானது. இதன்மூலம், நீங்கள் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை குலைக்க முயல்கிறீர்கள் என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தார்களே?

பதில்: இவர்களுடனான மோதலில் தேசியவாத பிரச்சினை துரோகிகளுக்கானதாகவும், வளர்ச்சிக்கானது அழிவுக்கானதாகவும் மாறியது. இந்த மோதல் தெளிவாகி 80-க்கு 20 என கொண்டு செல்கிறது. நீங்கள் அடித்தட்டு மக்கள் இடையேயும் இந்த எண்களில் வேறுபாடுகளை காணலாம். 80 சதவீதம் பேர், பாஜக, மோடிஜி, தாமரைக்கு ஆதரவாக இருப்பர். இருபது சதவீத்தினருக்கு வளர்ச்சி பிடிப்பதில்லை. மாஃபியாக்கள் நல்லவர்களாகத் தெரிகிறார்கள். மதக்கலவரத்தை விரும்புபவர்கள் அதை முடிவு செய்ய சுதந்திரம் உள்ளது.

கேள்வி: பாஜக, யோகிஜிக்கு முஸ்லிம்களுடனான உறவை நாம் அறிய முயன்றோம். இதில் பலர் யோகிஜியின் பணிகள் நன்றாக இருந்தாலும் அவரது, பேச்சுக்கள் மனதை புண்படுத்துகிறது. இதற்காக பாஜக முஸ்லிம்களை சிறிதும் விரும்பாமல் தங்களுக்கு அவர்கள் வாக்குகளும் தேவையில்லை என அமர்ந்திருப்பது போல் தோன்றுவதாகக் கூறுகின்றனரே?

பதில்: நாம் ஜாதி, மதத்தின் பேரில் வாக்குகள் கேட்பதில்லை. எனது சுமார் 25 வருட அரசியல் வாழ்வில் நான் எவரிடமும் ஜாதி, மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதில்லை.

கேள்வி: நீங்கள் கூறுவதில் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறுகிறாரே?

பதில்: திக்விஜய்ஜி சமூகத்தின் செயல்பாடுகள் அறியாதவர். அவர் தம் மனதில் தோன்றியபடி புகார் வைப்பார். பிறகு அதை வாபஸும் பெறுவார். நான் அதுபோன்றவர்களை போல் அல்ல. நான் செய்தைத்தான் சொல்கிறேன். உபிவாசிகள் அனைவருக்கும் அரசு திட்டங்களின் பலன் பெறும் உரிமை உள்ளது. இவர்களில் நாம் எந்த வேறுபாடுகளையும் பார்ப்பதில்லை. முகம் பார்த்து செய்யும் சேவை பாவம் என்பதால், அதை எங்களால் செய்யவே முடியாது. ஒரு முதல்வராக நான் அனைவரது குறைகளையும் கேட்டு தீர்க்கத் தயாராக உள்ளேன். இதற்காக ஒருவர் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருக்க வேண்டும். தாம் பத்வாக்களின்படி நடக்க வேண்டுமா அல்லது அரசியலமைப்பின் சட்டங்களின்படி வாழ வேண்டுமா என முடிவு செய்ய வேண்டும். முத்தலாக் தடை போன்றவற்றுக்கும் நாம் ஆதரவளிக்கும் போது எங்கள் மீது கோபம் வருவது ஏன்?

கேள்வி: இந்தமுறை மதுராவின் கிருஷ்ணஜென்மபூமியை விடுவிக்க சபதம் எடுக்கப்படுமா? இதை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடமளிப்பீர்களா?

பதில்: எது ஒரு பிரச்சினை என்பது இல்லையோ, அதை நாம் பிரச்சினையாகக் கருதுவதில்லை. நாம் எதைச் செய்தாலும் அதை அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைகளில் இருந்து செய்வோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in