நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா? - அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த மல்லிகார்ஜுன கார்கே

நீங்கள் என்ன ராமர் கோயில் பூசாரியா? - அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த மல்லிகார்ஜுன கார்கே

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கும் தேதியை அறிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அவர், "நீங்கள் என்ன ராமர் கோவிலின் பூசாரியா?. கோயில் திறப்பு பற்றி பேச நீங்கள் யார்? நீங்கள் ஒரு அரசியல்வாதி, பூசாரி அல்ல" என்று கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியவை சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னதாக, நேற்று அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 1, 2024-ல் தயாராகும் என்று திரிபுராவில் அமித் ஷா அறிவித்திருந்தார்.

ஹரியானாவின் பானிபட்டில் இன்று நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய கார்கே, "நீங்கள் ஒரு அரசியல்வாதி, பூசாரி அல்ல. கோயில் திறப்பு பற்றி பேச நீங்கள் யார்?. மகான்கள், சாதுக்கள் மற்றும் துறவிகள் இதைப் பற்றி பேசட்டும். நாட்டைப் பாதுகாப்பது உங்கள் கடமை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது உங்கள் கடமை. கோவில் பற்றிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது" என்று கூறினார்

நேற்று அமித் ஷா தனது உரையின் போது, “சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ராமர் கோயில் பிரச்சினை காங்கிரஸால் முடக்கப்பட்டு வந்தது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது” என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று பேசிய கார்கே, “அவர்கள் மிகப்பெரிய பொய்யர்கள். இரண்டு கோடி வேலை தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தனர், ஆனால் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.15 லட்சம் ரூபாயும் கொடுக்கத் தவறிவிட்டனர். நாட்டின் சுதந்திரத்திற்காக பாஜக போராடவில்லை, பிரதமர் 100 கார்களுடன் செல்கிறார், உள்துறை அமைச்சர் 50 கார்களுடன் செல்கிறார். ஆனால், எங்கள் திட்டங்களுக்காக நாங்கள் போராட வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in