ஆளுநர் நினைத்தால் அமைச்சர்களை நீக்க முடியுமா?

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பல விஷயங்களிலும் தமிழக அரசுடன் முரண்பட்டு நிற்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், அவரை எல்லாம் தேவலாம் என்று சொல்லுமளவுக்கு கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட்களை மிரளவைத்துக் கொண்டிருக்கிறார் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகான்.

“ஆளுநர் மீது கண்ணியக் குறைவான விமர்சனங்களை வைத்தால் அமைச்சர்களை பதவியில் இருந்தே நீக்கிவிடுவேன்” என்ற ஆரிப்பின் அதிரடி அறிவிப்பால் ஒட்டுமொத்த கேரள அரசியல்வாதிகளுமே அரண்டுபோய்த்தான் கிடக்கிறார்கள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனோ, தமிழக அரசியலைத் துளியும் தயக்கமின்றி பேசுகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு ஆளுநர்கள் இப்படி அரசியல் பேச ஆரம்பித்திருப்பது இயல்பான விஷயமா அல்லது பாஜக கொடுக்கும் தைரியமா என டீக்கடைகள் வரைக்கும் விவாதங்கள் நீள்கின்றன.

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

அண்மையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆளுநர்களை வைத்துக்கொண்டு மத்திய அரசு இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது” என்றார். தமிழக நிலவரத்தை நினைத்தே அவர் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய உச்சகட்ட சிக்கலை கேரள அரசும் இப்போது எதிர்கொண்டிருக்கிறது.

கேரளத்தில் ஆளுநர் - ஆளும் கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுநரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், ஆளுநர் பதவியின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டால், அமைச்சர் பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அண்மையில் எச்சரித்திருந்தார் ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்பாளர்.

சும்மாவே பேயாட்டம் போடும் காம்ரேட்கள் இதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்ட கண்டன அறிக்கையில், ‘இத்தகைய சர்வாதிகாரமான அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தால் ஆளுநருக்கு அளிக்கப்படவில்லை. இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அவருடைய அரசியல் சார்பு நிலையோடு இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு, இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத, ஜனநாயக விரோத அறிக்கைகளை வெளியிடுவதிலிருந்து கேரள ஆளுநரைத் தடுத்திட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.

இந்த மோதல் இன்று நேற்று தொடங்கியது அல்ல. ஆளுநர் ஆரிப் முகமதுகான், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகாவத் கேரளம் வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்து சர்ச்சையை உண்டாக்கினார். இதை இடதுசாரிகள் கண்டித்ததால் ஆளுநர் கோபமானார். இதனையடுத்து, ஆளுநர் மாளிகைக்கே ஊடகங்களை அழைத்து ஆளும் அரசுக்கு எதிரான புகார்களை அடுக்கினார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள செய்தியாளர் விஷ்ணு, “ஆளுநரால் அமைச்சர்களை தன்னிச்சையாக நீக்கமுடியாது என ஆரிப் முகமதுகானுக்கும் தெரியும். ஆனாலும் மீடியா பரபரப்புக்காக அவர் அப்படிச் சொல்கிறார். பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கான அதிகாரக் குறைப்பு மற்றும் லோக் ஆயுக்தா மசோதாக்கள் கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் கிடக்கிறது. பல்கலைக்கழகத்தில் ஆளுநருக்கான அதிகாரத்தைக் குறைப்பதில் ஆரிப்புக்கு உடன்பாடு இல்லை. எனவே, அதை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

ஆளுநரின் அதிரடி கருத்துப் பதிவுக்குள் இன்னொரு விஷயமும் இருக்கிறது. கேரளத்தைப் பொறுத்தவரை பாஜக பெரிய கட்சியே இல்லை. அதனால் ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு கேரளத்தில் கிடைத்த வரவேற்பை முறியடிக்கும் வகையிலேயே ஆளுநரை பரபரப்பாகப் பேசவைக்கிறார்கள் என்ற காங்கிரஸின் குற்றசாட்டையும் ஒதுக்கித்தள்ளுவதற்கில்லை” என்றார்.

இதேபோல் தெலங்கானா அரசுக்கும் ஏகப்பட்ட குடைச்சலைக் கொடுத்துவரும் அந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழகம் வரும்போதெல்லாம் திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக எதையாவது கொளுத்திப் போடுகிறார். அண்மையில் திமுகவில் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டபோது, “பெண்ணாக வரவேற்கிறேன். ஆனால், வாரிசு அரசியலை நோக்கி திமுக செல்வதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள்” என குத்திக்காட்டினார் தமிழிசை. அவரைப் பொறுத்தவரை தன்னை இன்னும் ஒரு அரசியல்வாதியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆளுநர் என்பதை அடிக்கடி அவருக்கு நினைவூட்ட வேண்டி இருக்கிறது.

அண்மையில், இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக கன்னியாகுமரிக்கு வந்திருந்த தமிழிசை, “காவியியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக்கூடாது. ஆளுநர் இப்படிப் பேசலாமா எனக் கேட்பார்கள். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள். நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஒரு சிபாரிசு செய்கிறார்கள். அதில், மாநில மொழியை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதை வைத்து மட்டுமே, அரசியல் செய்யமுடியும் என இதை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தமிழ், தமிழ் எனச் சொல்கிறோம். இன்று மத்தியப் பிரதேசத்தில் அவர்களின் தாய்மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுபோல முயற்சித்து தமிழில் இங்கு கொண்டு வந்திருக்கலாமே?” என்று திமுகவை தாக்கினார்.

கொடிக்கால் ஷேக் அப்துல்லா
கொடிக்கால் ஷேக் அப்துல்லா

சனாதானம் குறித்த உரை, நீட், புதிய கல்விக்கொள்கை தொடங்கி இப்போது திராவிட மாடல் விவகாரம் வரை பெரும்பாலான விஷயங்களில் திமுக அரசுக்கு எதிர் துருவத்திலேயே நிற்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கேரளத்தைப் போலவே இங்கும் கிடப்பில் கிடக்கின்றன.

ஆளுநர்களின் இந்தச் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய சமூக விடுதலைப் போராளி கொடிக்கால் ஷேக் அப்துல்லா ”மாநில சுயாட்சிக்கான உரிமைத் தீபத்தைப் பற்றவைத்த அறிஞர் அண்ணா, ‘ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன்?’ என அவரது காலத்திலேயே குரல் எழுப்பினார். இதேபோல் ஒருமுறை அண்ணாவிடம் அன்றைய எதிர்கட்சித் தலைவர் காங்கிரஸை சேர்ந்த கருத்திருமன், ‘எல்லா மட்டத்திலும் இருமொழிக் கொள்கையை அமல்படுத்துகிறீர்களே... உங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்?’ என்றுகேட்டார். அதற்கு அண்ணா, ‘என்னால் ஆனதை செய்துவிட்டேன். அவர்கள் தன்னால் ஆனதை செய்யட்டும்’ என்று சொல்லியிருந்தார். அதைத்தான் இப்போது நினைவூட்ட வேண்டி இருக்கிறது.

ஆளுநர் பதவி என்பதே வெறும் தகவல் கடத்திப் பணிதான். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக, தூதுவராக இருப்பதுதான் ஆளுநரின் பணி. அவர்களின் சுயகருத்தைச் சொல்லவோ, திணிக்கவோ கூடாது. ஆனால், இப்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிகூட விமர்சனம் செய்யும் சூழல் வந்துவிட்டது. ஆளுநர் போன்ற உயரிய பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

ஆனால் ஆளுநர்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் பாஜகவினரோ, “பேருந்தை ஓட்டுநர் சரியாக ஓட்டாதபோது, அருகில் இருக்கும் நடத்துநர் அதை சுட்டிக்காட்டுவது போலத்தான் இதுவும். மாநிலத்தை ஆள்கின்ற கட்சிகள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டவும் தட்டிக்கேட்கவும் ஆளுநர்களுக்கு உரிமை இருக்கிறது. முன்பெல்லாம் ஆளுநர்கள் அப்படிச் செயல்படாமல் இருந்ததால் தான், நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்ற கேள்வியே எழுந்தது. அப்படிக் கேட்டவர்கள் தான் இன்றைக்கு ஆக்டீவாக செயல்படும் ஆளுநர்கள் மீது அரசியல் சாயம் பூசுகிறார்கள்” என்கிறார்கள்.

ஆளுநரை வைத்து ஆளும் கட்சிகளுக்கு ஆட்டம்காட்டும் பாஜகவினர் இப்படிச் சொன்னாலும், தமிழகத்தை ஆளும் திமுகவினரும்ஆளுநர் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட்களும் இதை மாநில சுயாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறார்கள். இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in