அதிமுகவை கைகழுவுகின்றனவா கூட்டணிக் கட்சிகள்?

பாமகவுடன் 2021 தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தான போது...
பாமகவுடன் 2021 தேர்தல் உடன்படிக்கை கையெழுத்தான போது...

தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, இன்றைய சூழலில் ஒரு வலுவான கூட்டணியை கட்டமைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆளுக்கொரு பக்கமாக அதிமுகவின் தலைமைக்கு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் சூழலில், பாமக, தேமுதிக என அதன் முந்தைய கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து விலகிச் செல்வதால் ரத்தத்தின் ரத்தங்கள் சோர்வடைந்துள்ளனர்.

2016-ல் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தைக் களமிறக்கினார் ஜெயலலிதா. கூட்டுக்கு வந்த சிறிய கட்சிகளையும் இரட்டை இலையிலேயே களமாட வைத்து, அந்த தேர்தலில் அபார வெற்றியும் பெற்றது அதிமுக.

வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே ஜெயலலிதா அதிர்ச்சி மரணம் அடைந்த பின்னர், சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ் என அடுத்தடுத்து பிரளயங்கள் வெடித்தன. ஒருவழியாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என்ற இரட்டைத் தலைமை செட்டில் ஆன பின்னர், அவர்கள் சந்தித்த முதல் தேர்தலான 2019 மக்களவைத் பொதுத் தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்து ஆச்சரியம் கொடுத்தது அதிமுக. யாருமே எதிர்பாராத விதமாக பாமகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவந்தார்கள். அடுத்தடுத்து பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் அதிமுகவின் அணியில் இணைந்தது.

ஆனாலும் அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. என்றபோதும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்தார் ஈபிஎஸ். அந்த வெற்றிக்கு பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இக்கூட்டணி கணிசமான வெற்றியை பதிவு செய்தது.

ஓபிஎஸ், மோடி, ஈபிஎஸ்
ஓபிஎஸ், மோடி, ஈபிஎஸ்

ஒருபக்கம் ஒற்றுமையாக இருப்பதுபோல தெரிந்தாலும், மறுபக்கம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான பனிப்போர் கடுமையாகிக்கொண்டே இருந்தது. இவர்களுக்கு இடையேயான சிக்கல்களை தீர்ப்பதே பெரும்பாடான நிலையில், கூட்டணி கட்சிகளின் உறவை நிர்வகிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இதன் பாதிப்பு 2021 சட்டமன்றத் தேர்தலில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. அத்தேர்தலில் பாமகவுக்கு முதன்முதலாக 23 தொகுதிகளை ஒதுக்கி செட்டில் செய்தார்கள். அதன்பிறகு பாஜகவையும் ஒருவழியாக 20 தொகுதிகளுக்கு சம்மதிக்க வைத்தார்கள். தமாகாவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சொல்லி 6 தொகுதிகளை கொடுத்தார்கள். இன்னும் சில சிறிய கட்சிகளும் இருந்தன. இருப்பினும் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தேமுதிகவை கூட்டணியில் தக்கவைக்க அதிமுகவால் முடியவில்லை.

சில சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி டிடிவி. தினகரனின் அமமுக கூட்டணியில் சேர்ந்தது தேமுதிக. அதுபோல 2019 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் அதிருப்தியில் தனித்துப் போட்டியிட்டது.

2021 தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்ததுமே அதிமுகவிடம் இடைவெளியை கடைபிடிக்க ஆரம்பித்தன கூட்டணிக் கட்சிகள். அதன் பின்னர் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட ஆரம்பித்தனர். மற்றொரு பக்கம் சசிகலாவும் தனியாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இதன்காரணமாக, அதிமுகவில் மட்டுமின்று அதன் கூட்டணி கட்சிகளிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பல்வேறு தருணங்களில் பாஜக தலைவர்கள் மார்தட்ட ஆரம்பித்தனர். அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும்போது, அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக எப்படி தங்களை எதிர்க்கட்சி என சொல்கிறது என்பது அதிமுகவின் முக்கியத் தலைவர்களின் மனக்குமுறலாக இருந்தது. ஆனாலும் வெளிப்படையாக ஏதும் பேசமுடியாத நிலை அவர்களுக்கு.

அதிமுக நான்காக பிரிந்து கிடக்கும் சூழலில் எதிர்கால அணி சேர்க்கை எப்படி இருக்குமோ என்ற ஐயப்பாட்டுக்கு பதிலளித்த ஈபிஎஸ், “அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை அமைப்போம்” என கடந்த நவம்பரில் சூளுரைத்தார். அடுத்த சில வாரங்களிலேயே, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாஜகவை விமர்சித்துப் பேசி சலசலப்பை உருவாக்கினார். அதன்பின்னர் அதிமுக குறித்த அன்புமணியின் கருத்துக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த கடுமையான பதிலடி பெரும் சர்ச்சையானது.

அப்போதே அதிமுக – பாமக கூட்டணி இல்லை என்பது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. மற்றொருபக்கம், பாஜகவை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என சில அதிமுகவின் முக்கிய தலைவர்களும், அதிமுகவோடு கூட்டணி வேண்டாம் என பாஜகவின் முக்கிய தலைவர்கள் சிலரும் வலியுறுத்துவது இன்று வரை தொடர்கிறது. ஆக, அதிமுக – பாஜக கூட்டணியும் இப்போது முழு இணக்கமாக இருப்பதாக சொல்வதற்கில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமாகா மட்டுமே இப்போது ஈபிஎஸ் அணியை ஆதரித்திருக்கிறது. பாஜக யாருக்கு ஆதரவு என்று இன்னும் சொல்லவில்லை. தேமுதிக தனித்து களமிறங்கிவிட்டது. பாமகா யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தாகிவிட்டது. மற்ற கட்சிகள் எதுவும் அதிமுகவை ஆதரிக்கும் நிலையில் இல்லை.

ஆனால் ஆளும்கூட்டணியான திமுக, கட்டுக்கோப்புக் குறையாமல் வலுவாக நிற்கிறது. கூடுதலாக, இப்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளது. ஒருபக்கம் கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபக்கம் கூட்டணி கட்சிகளும் கைவிரித்து விலகிச் செல்வது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

இன்னும் ஓராண்டுக்குள் மக்களவைத் தேர்தல் வருகிறது. திமுக தனது கூட்டணியை வலுவாக வைத்துள்ள நிலையில், அதிமுகவுக்கும் கூட்டணியை ஸ்திரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, அதிமுகவால் கூட்டணியை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றால், அந்த வேலையை பாஜக கையில் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுகவின் வாக்குகளை கடந்த தேர்தல்களில் தினகரன் மட்டும்தான் பிரித்துக் கொண்டிருந்தார். ஈரோடு கிழக்கில் அதிமுகவே ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு திசைகளாக பிரியும் சூழல் உள்ளது. அதனால் இம்முறை அதிமுகவின் பாரம்பரிய ஓட்டுகளே மூன்றாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று ஈபிஎஸ் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். அநேகமாக அடுத்த சில நாட்களில் ஈரோட்டில் இலை துளிர்க்குமா கருகுமா என்பது தெரிந்துவிடும்.

ஒருவேளை, சின்னம் முடங்கினால் அதிமுக தலைமை யுத்தம் மக்களவைத் தேர்தல் வரை தொடரவும் வாய்ப்புள்ளது. அதிமுகவிடம் சின்னம் இல்லையென்றால், அக்கூட்டணியில் இருக்கும் இன்னும் சில கட்சிகளும் விலகும் சூழல் உருவாகலாம். இதையெல்லாம் தாண்டி 2024 மக்களவைத் தேர்தலை எப்படி அதிமுக எதிர்கொள்ளப் போகிறது என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி.

இப்போதைய சூழலில், கூட்டணியை கட்டமைக்க வேண்டியது என்பது அதிமுகவுக்கு இரண்டாம்பட்சம்தான். கட்சிக்குள் நிலவும் தலைமை யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் அதன் முதன்மைப் பணி. ஏனென்றால் பல அணிகளாக பிரிந்துகிடக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முக்கிய கட்சிகள் தயங்குகின்றன. ஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ அல்லது கூட்டுத் தலைமையோ... கட்சி மற்றும் சின்னத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்ற உத்தரவாதம் கிடைக்காத வரை அதிமுக என்ற கப்பலில் பயணிக்க எந்தக் கட்சியும் முன்வராது என்பதை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே புரிந்துகொள்ள வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in