தனியார் வசமாகிறதா தமிழக அரசுப் போக்குவரத்து?

மறுக்கும் அமைச்சர்... பதறும் தொழிலாளர்கள்!
தனியார் வசமாகிறதா தமிழக அரசுப் போக்குவரத்து?

‘அரசுப் போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற, தனியாரை ஈடுபடுத்தும் முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. அதற்காக முதல் கட்டமாக சென்னையில், 1,000 பேருந்துகளின் இயக்கத்தை தனியார் வசம் விடப்பட்டு, படிப்படியாக தமிழகம் முழுதும், 25 சதவீத பேருந்துப் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும்’ - அண்மையில் இப்படி வெளியான செய்தி ஒன்று போக்குவரத்துத் தொழிலாளர்களை பதறவைத்திருக்கிறது!

தமிழகத்தில் 1972-ம் ஆண்டுக்கு முன்பு வரை பேருந்து சேவைகள் தனியாரிடமே இருந்தன. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி 1972 மே 1-ம் தேதி, தனியார் பேருந்துகளை அதிரடியாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். "மே தின பரிசாக போக்குவரத்து தொழிலாளர்கள் வாழ்வில் ஔியேற்ற வேண்டும் என என் நெஞ்சில் இருந்த ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டேன்" என்று முதல்வர் கருணாநிதி அப்போது சொன்னார். இப்படித்தான் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் உருவானது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 20 ஆயிரத்து 304 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 804 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அரசுப் பேருந்துகளில் அன்றாடம் 2 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனாலும் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் தான் பயணிக்கிறது. 2021-2022 ஆண்டில் மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ரூ.6,488.74 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே, பெண்களுக்கு நகரப் பேருந்துகளிலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்துப் பேருந்துகளிலும் இலவச பயணம், எரிபொருள் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் பராமரிப்புச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், வருவாய் இழப்பு இன்னும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான், போக்குவரத்து கழகம் தனியார் மயமாகிறது என்ற செய்தியும் பதறவைக்கிறது.

அண்ணாமலை.
அண்ணாமலை.

இந்த செய்தி வெளியானவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல் நபராக தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். "தமிழகத்தில் போக்குவரத்துக் கழகத்தை பொருளாதார இழப்பிலிருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் பேருந்துகளை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்திருக்கும் தமிழக அரசு, பின்னர் படிப்படியாக அனைத்துப் பேருந்துகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் மனநிலையில் இருக்கிறது. மகளிருக்கும், காவலர்களுக்கும், மாணவர்களுக்கும் முற்றிலும் இலவச பயணம் என்று அறிவித்த தமிழக அரசு, தனியாருக்குத் தாரைவார்த்த பிறகு இவர்களுக்கான இலவசப் பயண திட்டத்தை என்ன செய்யப்போகிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் அண்ணாமலை.

அரசுத் தரப்பிலிருந்து இதற்கு உடனடி விளக்கம் இல்லை என்றாலும் இந்தச் செய்தி வெளியாகும் முன்பே அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசு தரப்பில் தொடங்கி விட்டார்கள். அரசு போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்குவதற்கான அறிவிப்பு மே 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசின் கொள்கை முடிவு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதில், ‘பேருந்து கொள்முதல், இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை மொத்த ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அல்லது பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் வழங்க தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘2021-2022 நிதியாண்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 6,488 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்த கொள்கை முடிவை அமல்படுத்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இப்போது அதிதீவிரம் காட்டி வருகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளைத் தனியாரிடம் வழங்க முடிவு செய்வது தொடர்பாக திருச்சியில் போக்குவரத்து மண்டல மேலாண்மை இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. இதன் கருத்துரு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, ‘சென்னையில் 1000 பேருந்துகள் தனியார்மயம்’ என்ற செய்தி வெளியானது.

சிவசங்கர்
சிவசங்கர்

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ``அரசுப் பேருந்துகள் தனியார்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும். எனவே, தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று சொன்னார். அமைச்சர் கூறிய இந்த பதிலை போக்குவரத்துத் தொழிலாளர்கள் சந்தேகக்கண் கொண்டு தான் இன்னமும் பார்க்கின்றனர்.

அ.சவுந்தரராசன்
அ.சவுந்தரராசன்

இது தொடர்பாக இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில தலைவர் அ.சவுந்தரராசனிடம் பேசினோம். "அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கைக் குறிப்பு, அதற்குப் பிறகு நடைபெற்ற போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை வந்தவுடன், அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று சிஐடியு அரசிடம் வலியுறுத்தியது. ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலும் இந்த விஷயத்தை வலியுறுத்திப் பேசினோம்.

அப்போது பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர், 'நமது ஆட்சியில் அது நடக்காது' என்றும், 'தனியார்மயத்திற்கும் இடமில்லை' என்றும் கூறினார். ஆனால்,'எலெக்ட்ரிக் பஸ்களை வாங்கப் போகிறோம். அப்படி வாங்கும் போது அதன் பராமரிப்புப் பணிகளை நமது ஊழியர்கள் செய்ய முடியாது. ஏனெனில், அதற்குப் பயிற்சி வேண்டும். எனவே, எலெட்ரிக் பஸ் பராமரிப்பை மட்டும் நமது ஆட்கள் பயிற்சி பெறும் வரை தனியார் பார்க்கட்டும்' என்றார்.

அத்துடன், 'ரயில்வே உள்ளிட்டவற்றை பாஜக தனியார்மயப் படுத்துவதை கடுமையாக எதிர்க்கும் நாங்கள் தனியார்மயத்தை ஆதரிப்போமா?' என்றும் அமைச்சர் கேட்டார். ஆனால், நஷ்டம் என்ற பெயரில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தனியார்மயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதற்காக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்துகளை இயக்குதல், புதிய பேருந்துகளை வாங்குதல், பராமரிப்பு ஆகியவை தனியார் வசம் இருப்பதை சுட்டிக்காட்டி அதற்கான கருத்துகளை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தத் திட்டம் வெற்றிபெறவில்லை. பேருந்துகளை இயக்க முடியாமல் தனியார் கைவிட்டுள்ளது தான் வரலாறு. எனவே, சேவைத்துறையான அரசுப் போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்க மாட்டோம் என்ற கொள்கை ரீதியான முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான், அரசுப் பேருந்துகளை நம்பியுள்ள லட்சக் கணக்கானத் தொழிலாளர்கள் மட்டுமின்றி இந்த பேருந்துகளை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களும் மகிழ்ச்சியடைவார்கள்" என்று சொன்னார் அவர்.

போக்குவரத்து என்பது மக்களுக்கான சேவைத் துறை. இதில் லாப நஷ்டக் கணக்கெல்லாம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் மக்களுக்கான சேவையை தரமுடியாது என்பதை மனதில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழ அரசு தகுந்த முடிவெடுக்கும் என்று நம்புவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in