‘மது அருந்துபவர்கள் மகாபாவிகள் என்றால்... ராணுவ வீரர்கள்?’

நிதீஷ் குமாருக்கு தேஜஸ்வி நெத்தியடி கேள்வி
தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

“மது அருந்துவதை மகாத்மா காந்தி கண்டித்தார். காந்தியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்படுபவர்கள் மகாபாவிகள், மகா அயோக்கியர்கள். அவர்களை நான் இந்தியர்களாகவே கருத மாட்டேன்” என்று பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் நேற்று, அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

கூடவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்போவதில்லை என்றும் தெரிவித்த அவர், “கள்ளச்சாராயம் அருந்துவது விஷம் அருந்துவதற்கு நிகரான ஆபத்தைக் கொண்டது எனத் தெரிந்தும் மக்கள் அதை அருந்துகின்றனர். அதற்கு அவர்கள்தான் பொறுப்பே தவிர, அரசு அல்ல” என்று கண்டிப்புடன் கூறியிருந்தார்.

நிதீஷ் குமாரின் பேச்சுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “நிதீஷ் குமாரின் லாஜிக்படி பார்த்தால், மது அருந்தும் இந்திய ராணுவ வீரர்களும் இந்தியர்கள் அல்ல. ரத்த ஆறு ஓடவைக்கும் குற்றவாளிகளும், ஊழல்வாதிகளும் மகாபாவிகள், மகா அயோக்கியர்கள் அல்ல. ஆனால், மது அருந்துபவர்கள் மட்டும் மகாபாவிகளா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

முன்னதாக, “நிதீஷ் குமார் ரொம்பவே களைப்படைந்து, தோல்வியடைந்தவராகக் காட்சியளிக்கிறார். அவரது கூட்டணிக் கட்சியான பாஜகவும் அதை உணர்ந்திருக்கிறது” என்றும் தேஜஸ்வி ட்வீட் செய்திருந்தார்.

2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு அமலில் இருக்கிறது. எனினும், மாநில அரசு மதுவிலக்கைத் திறம்பட அமல்படுத்தாததால், கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. 2021-ம் ஆண்டின் கடைசி 6 மாதங்களில் மட்டும் கள்ளச்சாராயம் அருந்தியதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விஷயத்தில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டுமல்லாமல், கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவும் நிதீஷ் அரசை விமர்சித்துவருகிறது.

இந்தச் சூழலில், மதுவிலக்கு சட்டத்தை முதல் முறையாக மீறுபவர்களுக்குக் குறைவான தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா பிஹார் சட்டப்பேரவையில் மார்ச் 30-ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உரையாற்றிய நிதீஷ் குமார், மது அருந்துபவர்களை அப்படி விமர்சித்திருந்தார். அதற்கு இப்படி பதிலடி கொடுத்திருக்கிறார் தேஜஸ்வி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in