ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அலுவலகங்களா?

ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அலுவலகங்களா?

தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று துவக்கி வைத்த அதே நேரத்தில், அவரது பதவியைக் குறைப்பதற்கான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்குமான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய கோரிக்கையான நீட் விலக்கு மசோதாவை, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பியும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததில் துவங்கியது பிரச்சினை. கொஞ்சம், கொஞ்சமாக அந்த மோதல் முற்றி நாடாளுமன்றத்தில் ஆளுநர் மீது புகார் எழுப்பும் வரை சென்றுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் விழாவிற்குச் சென்ற ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினர் கருப்புக்கொடி காட்டியது, ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு மட்டுமின்றி எதிர்கட்சியினர் புறக்கணித்தது என்ற நிலையில் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திறந்தநிலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகிய மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்போது சட்டப்பேரவையில் பேசி முதல்வர் ஸ்டாலின், " கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது " குற்றம் சாட்டிப் பேசினார். "ஆளுநர் மாளிகையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்" என்ற குரலும் சட்டப்பேரவையில் நேற்று ஒலித்துள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக எதிர்கட்சியினர் முன்வைத்த விவாதங்களும் அவரின் கவனத்திற்குச் சென்றிருக்கும். பாஜக, அதிமுக மட்டும் தான் ஆளுநருக்கு தற்போது ஆதரவாக உள்ளன.

1995-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கும், ஆளுநராக இருந்த சென்னாரெட்டிக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது, "பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருக்க முடியாது" என்ற சட்டமசோதாவை ஜெயலலிதா கொண்டு வந்தார். அதே வழியில் ஸ்டாலினும் நேற்று சட்டமசோதாவை கொண்டு வந்துள்ளார். ஜெயலலிதா அனுப்பிய மசோதா மட்டுமின்றி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் ராஜ்பவனில் ஆளுநரின் ஒப்புதலின்றி அமல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளன.

இந்தியா முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்குமான மோதல், மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட வைத்துள்ளது.

"நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அலுவலகமாக மாறி வருகின்றன" என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் பினாய் விஸ்வம் குற்றச்சாட்டி உள்ளார். அந்தக் குற்றச்சாட்டில் இருந்து பாஜக விடுபட வேண்டும் என்றால், மாநில அரசுகளுடன் இணைக்கமான சூழலுக்கு ஆளுநர்களின் செயல்பாடுகள் மாற வேண்டும். அதற்கான நடவடிக்கையில் உள்துறை அமைச்சகம் இறங்குவது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பலனளிக்கும். இல்லாவிட்டால், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்கட்சிக்கு கடுமையான எதிர்விளைவுகளையே உருவாக்கும் என்பது தான் வாக்காளர்களின் பார்வையாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in