அரசு ஊழியர்களை அலைக்கழிக்கிறதா அரசு?

நிதியமைச்சரை நிந்திக்கும் ஊழியர் சங்கங்கள்!
அரசு ஊழியர்களை அலைக்கழிக்கிறதா அரசு?

திமுக ஆட்சிக்கு வந்தால் தங்களின் கோரிக்கைகள் எல்லாம் கவனிக்கப்படும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆண்டு ஒன்றாகியும் இன்னமும் அதற்கான முகாந்திரம் தெரியாததால் அவர்கள், ஆட்சிக்கு எதிரான மனநிலைக்குத் திருப்பப் படுகிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கடந்த திமுக ஆட்சிகளில் இவர்களுக்கான சலுகைகள் ஓரளவுக்கு தாராளமாகக் கிடைத்தன. அதனால் தான் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது திமுக அனுதாபிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது. அதற்கேற்ப அவர்களில் பெரும் பகுதியினர் திமுகவுக்கு கைகொடுத்தும் வந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்காக போராடிக் களைத்துப் போன அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஆட்சி மாற்றம் வந்தாலும் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது “அரசு ஊழியர்களின் இந்தக் கோரிக்கை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்” என்றவர் இப்போதைய முதல்வர் ஸ்டாலின். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பான வாக்குறுதி பிரதானமாக இடம்பிடித்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அதிகமான சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை” என்று பேசி அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால் ஒருவருக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் செலவாகிறது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது. இந்த விவகாரத்தில் முதல்வரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்” என்றார். அவரின் இந்தப் பேச்சுக்கு அப்போதே அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.

“நிதிச் சுமையைக் காரணம் காட்டியே 2003-ல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. அது தெரிந்துதானே திமுக கடந்த தேர்தல்களில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. அன்றைக்கு அப்படிச் சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் நிதிச்சுமையைக் காரணம் காட்டுவது எந்தவிதத்தில் நியாயம்” என கேள்வி எழுப்பின அரசு ஊழியர் சங்கங்கள்.

அதேசமயம், “நிதியமைச்சர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? 2022-23-ம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் ரூ.2,31,000 கோடி என்றால், இதில் அரசு ஊழியர்களுக்கான ஊதியச் செலவுகள் மட்டும் 46.5 சதவீதமாகும். கிட்டத்தட்ட வருவாயில் பாதி அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காகச் செலவாகிறது" என்று சமூக வலைதளங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சாடியவர்களும் உண்டு.

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முதல்வரைச் சந்தித்த போது...
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் முதல்வரைச் சந்தித்த போது...

இந்நிலையில் தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர் - ஆசிரியர்களின் மனதைப் புண்படுத்துவது போல் தொடர்ந்து பேசிவருவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.

ச.மயில்
ச.மயில்

முதல்வரை சந்தித்த குழுவில் இருந்த ஜாக்டோ- ஜியோ நிர்வாகியும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமான ச.மயிலிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் குறித்து தவறான புரிதலில் இருக்கிறார். அகவிலைப்படி 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படுவது காலம் காலமாக உள்ள நடைமுறை. ஆனால், கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் அகவிலைப்படி அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் அகவிலைப்படி வழங்கப்பட்டுவிட்டது. அடுத்த அகவிலைப்படி உயர்வை அறிவிக்கவும் ரெடியாகிவிட்டார்கள். இருந்தும், மாநில அரசு ஏன் இன்னும் அகவிலைப்படியை அறிவிக்கவில்லை என்று கேட்டால், ‘முதியோர் பென்ஷன் வாங்குபவர்களுக்கெல்லாம் விலைவாசிக்கேற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படியா தருகிறோம்?’ என தமிழக நிதியமைச்சர் கேட்கிறார்.

மக்களிடையே ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்த அவர் முயற்சி செய்கிறார். இவரின் பேச்சால் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதைத்தான் தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொல்லிவிட்டு வந்தோம். இதை நிதியமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகச் சொன்ன முதல்வர், ’உங்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுகிறேன்’ என்று உறுதி கொடுத்திருக்கிறார். சொன்னபடி அவர் செய்வார் என நம்புகிறோம்” என்று சொன்னார் அவர்.

வெ.கொ.சூர்யா
வெ.கொ.சூர்யா

இதுகுறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் வெ.கொ.சூர்யாவிடம் கேட்டபோது, “அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்கும் சூழலே அதிமுக ஆட்சியில் இல்லை. ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது இவர்களைச் சந்திக்கவே மறுத்தார். ஆனால், திமுக ஆட்சியில் தாய் உள்ளத்துடன் அவர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அரசின் நிதிநிலை சரியானதும் உங்களின் கோரிக்கைகளைப் படிப்படியாக நிறைவேற்றித் தருகிறேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் மின்துறையில் மட்டும் 1.48 லட்சம் கோடி கடனைக் கடந்த அதிமுக ஆட்சி வைத்துவிட்டுச் சென்றுவிட்டது. அதற்கு நாங்கள் வட்டி கட்ட முடியவில்லை. வட்டி கட்ட முயற்சி செய்தால் கூட கடன் கொடுப்பவர்களை தமிழக அரசுக்கு தராதே என ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலையை ஓட்டைப் பானையாக மாற்றிவிட்டார்கள். ஓட்டையை அடைத்தால் தான் பானை நிரம்பும்.

இதை மனதில் வைத்துத்தான் தொழில்துறை கட்டமைப்பைச் சீரமைக்கவும், வேளாண் துறையை விரிவாக்கம் செய்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, ஒன்றிரண்டு ஆண்டுக்குள் அரசு ஊழியர் - ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்” என்றார் அவர்.

சொன்னபடி, நிதிநிலை சீரானதும் கோரிக்கைகள் கவனிக்கப் படட்டும். அதற்கு முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த விஷயத்தில் அதிரடியாக ஏதும் பேசாமல் இருக்க வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் இப்போதைய கோரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in