குஜராத் தேர்தலுக்குத் தயாரான ஆம் ஆத்மி: அர்விந்த் கேஜ்ரிவால் வாக்குறுதிகளால் மிரளும் பாஜக!

குஜராத் தேர்தலுக்குத் தயாரான ஆம் ஆத்மி: அர்விந்த் கேஜ்ரிவால்  வாக்குறுதிகளால் மிரளும் பாஜக!

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைச் செயல்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத்தில் உள்ள துவாரகா மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த கேஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது மாநில அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அர்விந்த் கேஜ்ரிவால் பேசுகையில், “ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து அவர்களது விளைபொருட்களை அரசின் மூலம் நேரடியாகக் குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயித்துப் பெற்றுக் கொள்ள முடியும். பாஜக அரசினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நில அளவீடுகளால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

விவசாயிகளின் நிலங்கள் மீண்டும் சரியான முறையில் நில அளவை செய்யப்படும். ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டாலும் நிர்ணயிக்கப்படும் விலையை விடக் குறைவான விலைக்கே தங்களது விளைச்சலை விவசாயிகள் விற்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலைக்கு எந்த வியாபாரியும் வாங்கவில்லை என்றால் எங்களது அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளின் விளைபொருட்களை கண்டிப்பாக வாங்கிக் கொள்ளும்.

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். குஜராத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு மின்சாரம் இரவு நேரத்தில்தான் கிடைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் நீர்ப்பாசனத்திற்காக மின்சாரம் வழங்குவோம். டெல்லியில் இயற்கை சீற்றங்களில் போது விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகையை குஜராத்திலும் வழங்குவோம். ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் நர்மதா அணைத் திட்டத்தின் கீழ் வரும் கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தருவோம் ” என்றார். ஆம் ஆத்மியின் வாக்குறுதிகளால் ஆளுங்கட்சியான பாஜக அரண்டு போய் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in