
2 ஜி வழக்கையே பார்த்தவன்நான். சொத்துக்குவிப்பு வழக்கு எனக்குப் பெரிய விஷயமல்ல என்று ஆ.ராசா எம்.பி கூறினார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 'திசா' எனப்படும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவர் என்ற முறையில் வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆ.ராசா கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ரூ.5 கோடி சொத்து சேர்த்திருப்பதாக என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரூ.5 கோடி சொத்து என்னுடையது அல்ல. மற்றவர்களுக்குச் சொந்தமானது. இந்த சொத்துகளை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என அனைத்து துறையினரும் ஆய்வு செய்து இவை ராசாவுக்கு சொந்தமானது இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், அவர்களின் கொள்கைகளையும் சவால் விடும் வகையில் நான் பேசி வருகிறேன். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தேர்தலை குறிவைத்து சொத்துக் குவிப்பு என என்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறார்கள். 2 ஜி வழக்கையே பார்த்தவன் நான். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் பார்த்துக் கொள்வேன்.
மத்திய அரசு இந்தியாவில் கட்டிய 80 சதவீத கழிப்பிடங்கள் பயனற்று உள்ளது. கழிப்பிடங்கள் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான கழிப்பிடங்களில் தண்ணீர் இல்லை. இப்படி இருக்கும் மத்திய அரசு கழிப்பிடங்கள் கட்டி கொடுத்துள்ளோம் என்று பெருமை மட்டும் பேசிக்கொள்கிறார்கள். மாநிலங்கள் கொடுக்கும் வரி பணத்தை தான் மத்திய அரசு செலவு செய்கிறது" என்றார்.