முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த அமைச்சர்தான் என்னை வேலை வாங்குகிறார்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சென்னையில் 31 இணையர்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்தத் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்திவைத்தார். தொடர்ந்து இவ்விழாவில் பேசிய அவர், திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் பட்டியலிட்டுப் பேசினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பற்றி பல கூட்டங்களிலும் செயல் பாபு என குறிப்பிட்டுக் காட்டியுள்ளேன். அவரும் தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். வழக்கமாக முதலமைச்சர்தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள். ஆனால் அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரை வேலை வாங்கக்கூடியவர். அதுவும் நாட்டிற்கும், மக்களுக்கும் பயன்படக்கூடிய வேலையை வாங்குவார். இதுவரை உலக வரலாற்றிலேயே இந்து சமய அறநிலையத்துறைக்கு இவ்வளவு சாதனை நடந்திருக்கிறதா என்றால் தமிழகத்தில், சேகர்பாபு வைத்திருக்கும் துறைதான் அந்த சாதனையை செய்திருக்கிறது என கம்பீரமாகச் சொல்லமுடியும்.

அறநிலையத்துறை நிர்வகிக்கும் 47 கோயில்களில் அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமையை மீட்டுத் தந்துள்ளோம். மேலும் பல கோயில்களிலும் இதை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளோம். கோயில் பொது சொத்து விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பெண் அலுவரை நியமித்துள்ளோம். 3700 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எடுத்துள்ளோம். பெரியார் கனவை நிறைவேற்றும் வகையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியுள்ளோம். ஒன்றரை ஆண்டில் இந்தத் துறையில் பல சாதனைகள் நடந்துள்ளது. இதை குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் சேற்றைவாரி வீசுகின்றனர். அரசியலுக்கு வேறு எதுவும் கிடைக்காததால் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். நம்மைப் பொறுத்தவரை அண்ணாவழியில் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என இயங்குகிறோம். அதன் அடையாளம் தான் இந்த எளியோருக்கான மணவிழா. தமிழகம் முழுவதும் இன்று 217 இணையருக்கு அறநிலையத்துறை சார்பில் மணவிழா நடந்துள்ளது.

மன்னராட்சி காலம் என்றாலும், மக்களாட்சி காலமானாலும் கோயில்கள் மக்களுக்குத்தான். கோயில்கள் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சி காலத்தில் அறநிலையத்துறை உருவானது. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் அதிக குடமுழுக்கு நடந்தது. ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமையும் அவரையே சேரும். பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டதும் கழக அரசுதான். இப்போதும் திடாவிட மாடல் அரசின் சாதனை தொடர்கிறது. அமைச்சர் சேகர்பாபுவே ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாகச் செல்கிறார். அலுப்பும், சலிப்பும் இல்லாமல் பயணித்து அரசுக்கு பெருமை சேர்க்கும் சேகர்பாபுவுக்கு வாழ்த்துகள்.

மணமக்கள் இருகுழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நாம் இருவர், நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. நீங்கள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு அளவான குழந்தை பெற்று, அழகான தமிழ் பெயரைச் சூட்டுங்கள். இல்லத்தில் சமத்துவத்தைப் பேணுங்கள். இதை முதல்வராக அல்ல. உங்கள் தந்தை என்னும் ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன். பாரதிதாசனின் குடும்ப விளக்கைப் போல் வாழ்க!”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in