
சிறுபான்மை ஆணைய துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், 1989 டிச.13-ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு, 2010-ம் ஆண்டு, மீண்டும் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-ன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாகச் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருத்தியமைத்தார். அதன் தலைவராக எஸ்.பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவராக மஸ்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த டிச.22-ம் தேதி மஸ்தான் மரணமடைந்தார்.
இதனையடுத்து சிறுபான்மை ஆணைய துணைத் தலைவராக இறையன்பன் குத்தூஸை தமிழ்நாடு அரசு இன்று நியமனம் செய்து அறிவித்துள்ளது.