உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: வேகமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: வேகமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி.வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவும், ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுக்களையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கவலையடைய வைத்துள்ளது. இந்நிலையில், தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்" என்றார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரின் அதிகார போட்டியால் சட்டப்போராட்டம் நடத்தி வருவது அதிமுக தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறதோ? காத்திருப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in