பாஜகவில் இணைந்தார் முலாயம் சிங்கின் மருமகள்!-

உபி அரசியலில் பரபரப்பு
முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்னா
முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்னாtwitter

பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து வரும் நிலையில், முலாயம் சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி உள்ளன. இதனிடையே, பாஜகவை சேர்ந்த 3 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதனால், ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கின் இளையமகன் பர்திக் யாதவின் மனைவி அபர்னா யாதவ் (32) இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அபர்னா யாதவ் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக் கொண்டார்.

அபர்னா
அபர்னாtwitter

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபர்னா, "பா.ஜ.கவுக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் பணியை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் குறித்து நான் எப்போதும் குரல் கொடுத்து வருகிறேன். தேசியவாதம் என் வாழ்வின் மிக முக்கியமான அம்சம். நான் இதற்கும் முன் எப்போதும் தேசத்தைப் பற்றியே நினைத்தேன். அவர்கள் என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன்" என்று கூறினார்.

சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி - பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகள் பாஜகவில் இணைந்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபர்னா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளதால் சமாஜ்வாதிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அபர்னாவுக்கு பாஜக வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபர்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அகிலேஷ் யாதவிற்கும் தலைவலியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு லக்னோ காண்ட் சட்டப்பேரவை தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் அபர்னா போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in