
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலையில் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அக்கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவை தங்கள் பக்கம் திருப்புவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பெருமளவில் பணம் செலவிட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் அதற்குரியவர்களாக கருதப்படும் சில நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் வடவள்ளி சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் ஆகியோரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது டெல்டா மாவட்டத்தில் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜை குறி வைத்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
டெல்டா மாவட்ட நிர்வாகிகள் பலரையும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திருப்பியதில் ஆர் காமராஜின் பங்கும் முக்கியம். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அவர் மூலமாகதான் டெல்டா மாவட்டங்களில் வேட்பாளர்களுக்குரிய செலவினங்கள் கவனிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை எடுத்து தொடர்ந்து காமராஜ் தொடர்புடைய இடங்களில் கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு, மன்னார்குடி நகர அதிமுக செயலாளர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேரின் வீடுகளில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர். துணைக் காவல் கண்காணிப்பாளர் சத்திய சீலன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்
மன்னார்குடியில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை உட்பட காமராஜ் தொடர்புடைய மொத்தம் 49 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
வருமானத்திற்கு அதிகமாக 58.44 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக ஆர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையினர், இது தொடர்பாக ஆர்.காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், மன்னார்குடியில் காமராஜின் இல்லத்திற்கு முன்பாக திரண்டுள்ள அதிமுக தொண்டர்கள் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தனது ஆதரவாளர்கள் வீடுகளை குறி வைத்து நடத்தப்படும் சோதனைகளால் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அப்செட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் சோதனையின் எதிரொலியாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கிலியில் உள்ளனர்.