உதயகுமாருக்கு உதறலைக் கொடுத்த ஓபிஎஸ்!

ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த ஐயப்பன் எம்எல்ஏ
ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்த ஐயப்பன் எம்எல்ஏ

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதியின் தீர்ப்பையடுத்து தங்கள் தரப்பை வலுவாக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு ஈடுபட்டிருக்கிறது. ஓபிஎஸ் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் அதில் இணைந்திருக்கிறார் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன். இது ஈபிஎஸ் அணிக்கு மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஓபிஎஸ் பக்கம் செல்லாமல் ஈபிஎஸ் பக்கமே உறுதியாக நிற்பதால் அவருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பொறுப்பையும் ஈபிஎஸ் வழங்கியிருக்கிறார். மேலும் தென் மாவட்ட அதிமுகவைக் கட்டிக் காக்கும் பொறுப்பையும் அவருக்கு ஈபிஎஸ் வழங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வலைவிரித்து வருகிறது. பலரோடும் பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில முன்னாள் அமைச்சர்களும் அவரை வந்து சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் ஓபிஎஸ்சைச் சந்தித்தார்களாம்.

உதயகுமார்
உதயகுமார்

இவையெல்லாம் ஈபிஎஸ் தரப்புக்குத் தெரியவந்ததும் உடனடியாக இதுகுறித்து உதயகுமாரிடம் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதனால்தான் அன்றைய தினமே 'பணத்தைக் காட்டி அதிமுகவினரை வளைக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ்' என்று உதயகுமார் பரபரப்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கும் ஈபிஎஸ் தரப்பிற்குமாக சேர்த்து பதிலடி கொடுத்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

நேற்று மாலை சென்னையில் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்த ஐயப்பன், “தனக்கு ஏற்பட்ட அவமானங்களைத் தாங்கிக்கொண்டு, 'கட்சி ஒன்றாக இணைய வேண்டும். பிரிந்த அனைவரும் ஒன்றாக இணைவோம்' என ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். அதையேற்று அவரிடம் வந்துள்ளேன். ஜெயலலிதா கண்ட கனவு நிறைவேற அவருக்கு பின்னாலிருந்து ராமருக்குப் பாலம் கட்ட அணில் உதவியது போல் நானும் பணியாற்றுவேன். என்னைப்போல் மேலும் பல எம்எல்ஏ-க்கள் இங்கு வருவார்கள். அதிமுக ஒன்றாக இணைந்து, தமிழகத்தை ஆள வேண்டும். மக்களை ஏமாற்றும் திமுக அரசை அகற்ற, அனைவரும் இணைவார்கள்" என்று கூறி ஈபிஎஸ் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஈபிஎஸ் தரப்பை வலுப்படுத்த தென் மாவட்டங்களைத் தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உதயகுமாருக்கு அவரது மாவட்டத்திலிருந்தே ஒரு எம்எல்ஏவை இழுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. மேலும் பலர் வருவார்கள் என்று அந்த எம்எல்ஏ கூறியிருப்பதை உண்மையாக்கும் வகையிலான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதால் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது என்ற கவலையில் இருக்கிறாராம் உதயகுமார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in