ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால், விண்வெளி ஆராய்ச்சியில் இன்று இந்தியா மற்றொரு வரலாற்று அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இதில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும்ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.
இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, 127 நாட்கள் பல்வேறுகட்ட தடைகளைக் கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளிக்கு அருகே உள்ளது. தொடர்ந்து எல்-1புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்யும். சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்ப்பிய முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. எரிபொருள் இருப்பைப் பொறுத்து இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். இதில் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆராய 7 வகையான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டு, நேரடியாக சூரியனை கண்காணித்து தகவல்களை வழங்கும். மீதமுள்ள கருவிகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால், அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்களை, எல்-1 பகுதியில் உள்ள துகள்களை ஆராய்ந்து கணிக்கும். மேலும் இது சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுகளை செய்யும்.
இந்நிலையில் இந்த வரலாற்று வெற்றிக்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார். "இந்தியா மற்றொரு வரலாற்று அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நமது முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்திருக்கிறது. மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில், நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து அடைவோம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இதையும் வாசிக்கலாமே...
உங்க அப்பன் வீட்டு வண்டியா? பெண்ணிடம் ஆவேசப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ!
பகீர்...மெட்ரோ ரயில் முன் பாய்ந்த இளைஞர்: தந்தை இறந்த சோகத்தால் எடுத்த விபரீத முடிவு!
அதிர்ச்சி... 500 ரூபாய்க்காக தந்தையைக் கொலை செய்த மகன்!
இலவச பேருந்து பயணத்தால் வாழ்வாதாரம் போச்சு.. பிச்சை எடுத்து போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்!
புகார் கொடுத்ததால் மிரட்டிய போலீஸ்... மகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்!