உதயநிதி - மோடி சந்திப்பு: உள்ளுக்குள் ஓடும் திட்டம் என்ன?

உதயநிதி - மோடி சந்திப்பு...
உதயநிதி - மோடி சந்திப்பு...

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடக் கிளம்பிக் கொண்டிருக்கையில் அரசு முறை பயணமாக டெல்லிக்கு விரைந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் சமூகமளிப்பதற்கான பயணம் இது என்றாலும், பிரதமர் மோடியை சந்திக்கும் திட்டமே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது!

பிரதமருடனான சந்திப்பில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை வலியுறுத்தியாக உதயநிதி சொன்னாலும், இந்தச் சந்திப்பின் பின்னால் இன்னொரு அஜெண்டாவும் இருக்கிறது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் நிலவுவதாக பலரும் சொன்னார்கள். அதை கச்சிதமாக பிடித்துக்கொண்ட பாஜக, அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்தக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, தன்னை பிரதான எதிர்க்கட்சியாக தகவமைத்துக் காட்டத் தொடங்கியது. மடியில் கனம் இருந்ததால் அதிமுக தலைவர்களாலும் பாஜகவை மீறி எதையும் செய்யமுடியவில்லை.

அதிமுக இப்படி பாஜகவின் கைப்பாவையாக இருப்பது எதிர்காலத்தில் தங்களுக்கும் பாதகமாக முடியும் என்பதை அறிந்து பதறியது திமுக. அந்தப் பதற்றமானது பாஜகவை மூர்க்கமாக எதிர்க்கும் அரசியலாக மாறியது. ஆனால், மோடி எதிர்ப்பு, மத்திய பாஜக அரசுக்கான எதிர்ப்பு என்பதில் எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு தனது அணுகுமுறையையே அடியோடு மாற்றிக் கொண்டது திமுக. எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது, ’கோ பேக் மோடி’ என்று கோஷம் போட்டவர்கள் எல்லாம் ஆளும் கட்சியாக வந்த பிறகு குரலற்றவர்களாகிப் போனார்கள்.

இப்படியான சூழலில் தான் மகன் உதயநிதியை டெல்லியம்பதிக்கு அனுப்பி பிரதமர் மோடியைச் சந்திக்க வைத்துச் சாதித்திருக்கிறார் ஸ்டாலின். இத்தனைக்கும், தேர்தல் சமயத்தில் ஒற்றைச் செங்கலை வைத்துக்கொண்டு பாஜகவுக்கு எதிராக குடைச்சல் கொடுத்து பரபரப்பை உண்டாக்கியவர் உதயநிதி.

அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் மகனையும் அமரவைத்து நிர்வாக விவகாரங்களைப் படிக்க வைக்கும் ஸ்டாலின், டெல்லிக்கு அனுப்பி பிரதமரைச் சந்திக்க வைத்து மகனை அடுத்தகட்டத்துக்கும் தயார்படுத்தி இருக்கிறார். இதன் மூலம், உதயநிதி அடுத்து எந்த இடத்துக்கு நகர்த்தப்படுவார் என்பதை இந்த தேசத்துக்கு குறிப்பாக, திமு கழகத்தினருக்கு சொல்லாமல் சொல்லி புரியவைத்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் அடிப்படையிலிருந்தே அரசியல்வாதி என்பதால் அவரை அரசியலில் முன்னிலைப்படுத்த அவரது தந்தை முத்துவேல் கருணாநிதிக்கு அத்தனை சிரமம் இருக்கவில்லை. இருந்த போதும் மேயர், அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாகத்தான் அவரை ஆட்சி அதிகாரத்துக்குள் முன்னிலைப்படுத்தினார் கருணாநிதி. அதற்கே ஆயிரம் விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

ஆனால், உதயநிதி அப்படியல்ல. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த அவரை தந்தைக்கு வயதாகிறது என்பதற்காக திடீரென அரசியலுக்குள் கொண்டு வந்தது குடும்பம். வந்த வேகத்திலேயே அரசுப் பொறுப்புகளிலும் அவரை முன்னிலைப்படுத்தவும் ஆசைப்பட்டார்கள். ஆனால், ஊர் வாய்க்குப் பயந்து உடனே அதற்குச் சம்மதிக்கவில்லை ஸ்டாலின். என்றபோதும், “உதயநிதி அமைச்சராவார், உதயநிதிக்கு துணை முதல்வராகும் தகுதி இருக்கிறது” என்றெல்லாம் அவருக்குப் பிரியமான அன்பில் மகேஷ் போன்றவர்கள் மேடைகளில் பேச ஆரம்பித்தார்கள்.

இதைக் கேட்டுவிட்டு, “சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுதானே நடக்கும் என்று மக்களும் பேச ஆரம்பித்தார்கள். மக்களையும் சக அரசியல்வாதிகளையும் இத்தகைய மனநிலைக்கு கொண்டு வந்த பிறகே மகன் உதயநிதியை அமைச்சரவைக்குள் அழைத்தார் முதல்வர் ஸ்டாலின். அவர் எதிர்பார்த்தது போலவே இதற்கு எதிர்ப்புகளோ விமர்சனங்களோ அத்தனை வீரியமாய் இல்லை. அனைத்துத் தகுதியும் இருந்தும் கருணாநிதிக்கு 70 வயதான போதுதான் ஸ்டாலினால் மேயர் பதவிக்கே வரமுடிந்தது. ஆனால், தனக்கு 70 வயது நெருங்கும் சமயத்தில் மகனை அமைச்சர் நாற்காலியிலேயே அமரவைத்துவிட்டார் ஸ்டாலின்.

அமைச்சராக்கிவிட்ட அன்பு மகன் உதயநிதியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும். கழகத்தினர் எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல அது துணை முதல்வர் இருக்கையாகக் கூட இருக்கலாம். அத்தகைய இடத்துக்கு வரவேண்டுமானால் அவருக்கு இன்னும் சில படிப்பினைகள் வேண்டும். சகிப்புத் தன்மை வேண்டும். அரசியல் நெளிவு சுழிவுகளைப் படிக்க வேண்டும். முக்கியமாக, செங்கோட்டையில் இருப்பவர்கள் தரும் என்ஓசியும் வேண்டும். அந்த என்ஓசி-க்காகத்தான் மகனை டெல்லிக்கு அனுப்பிவைத்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதன் மூலம், நாங்கள் மைக்கில் பேசும் அரசியல் வேறு... அரசு நிர்வாகத்தில் வைத்திருக்கும் அணுகுமுறை வேறு என்பதை பிரதம அமைச்சருக்கு புரியவைத்திருக்கிறார் ஸ்டாலின்.

ஸ்டாலினை கருணாநிதி முன்னிலைப்படுத்திய போது கட்சிக்குள் கலகம் பிறக்கவில்லை. ஆனால், வீட்டுக்குள் கலகம் பிறந்தது. மூத்தவர் மு.க.அழகிரி. மு.க.ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தார். அத்தகைய எதிர்ப்பு தனது மகன் விஷயத்தில் வரக்கூடாது என்று நினைத்த ஸ்டாலின், அழகிரி தரப்புக்கும் செய்ய வேண்டியதைச் செய்து அவர்களையும் சாந்தப்படுத்தினார். அமைச்சரானதும் பெரியப்பாவை சந்திக்க மதுரையிலுள்ள சத்ய சாய் நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டார் உதயநிதி. ஒரு காலத்தில் தம்பி இந்த இடத்துக்கு வந்தபோது அதை எதிர்த்த அழகிரி. இப்போது தம்பி மகனை வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்றார். ஆக, உதயநிதி அடுத்த கட்டத்துக்கு உயர கருணாநிதி குடும்பத்துக்குள் இப்போது யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லை.

“தனக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுக என்ற இயக்கம் இருக்கும்” என்று சட்டப் பேரவையிலேயே முழங்கினார் ஜெயலலிதா. அப்படிச் சொன்னவர், தனக்குப் பின்னால் கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டாமல் போய்விட்டார். அதற்கான விளைவை இப்போது அதிமுக தொண்டர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவுக்கு அத்தகைய நிலை வரக்கூடாது என்பதில் கருணாநிதியும் காரியமாய் இருந்தார். அவர் வழி நடக்கும் அவரது பிள்ளை ஸ்டாலினும் கருத்தாய் இருக்கிறார்.

அரசு முறை பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த உதயநிதி, சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ சந்திக்காமல் திரும்பியதும் கவனிக்கத்தக்கது. இதன் மூலமும் அரசியல் வேறு, அரசு நிர்வாகம் வேறு என்பதை டெல்லிக்கு உணர்த்தி இருக்கிறார் உதயநிதி. சோனியாவையோ, ராகுலையோ அவர் சந்தித்திருந்தால் யாரும் கேள்விகேட்கப் போவதில்லை. ஆனால், அதுமாதிரியான சந்திப்புகளை நடத்தி பாஜக வட்டாரத்தை தேவையில்லாமல் சங்கடப்படுத்த வேண்டாம் என்று அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

மோடியை சந்தித்த போது...
மோடியை சந்தித்த போது...

உதயநிதி டெல்லி விசிட்டின் பின்னணியில் பேசப்படும் விஷயங்கள் குறித்து திமுக வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “நீட் விலக்கு உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக பேசுவதற்காகத்தான் உதயநிதி பிரதமர் மோடியைச் சந்தித்தார். நீங்கள் சொல்வது போல் இது அரசு சார்ந்த ஒரு சந்திப்பு தானே தவிர இதில் அரசியல் துளியும் இல்லை. மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்துவிட்டார். அதனால் உதயநிதி இனிமேல் பாஜகவை விமர்சனம் செய்யமாட்டார் என்று நினைக்க வேண்டாம்.

மோடியின் கையில் பிள்ளையார் சிலையைக் கொடுக்கவில்லை... வள்ளுவர் சிலையைத்தான் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் உதயநிதி. எனவே, அரசு முறைப் பயணத்தையும் அரசியலையும் போட்டு யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். அதேபோல், உதயநிதிக்கு எந்த பதவியை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை எங்கள் தளபதி முடிவு செய்வார். இதற்கு பாஜகவிடம் என்ஓசி பெறவேண்டிய அவசியமெல்லாம் எங்களுக்கு இல்லை” என்றனர்.

அடுத்து வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கான வாய்ப்புகளே அதிகம் தெரிகின்றன என்று பரவலாக செய்திகள் சொல்லப்படும் நிலையில், மகனை டெல்லிக்கு அனுப்பி பிரதமர் மோடியைச் சந்திக்க வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். “தமிழக நலனுக்கான சந்திப்பு இது” என்று இது திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும், தமிழக நலன் என்று சொல்லி நாளை எத்தகைய முடிவையும் எடுப்பதற்கான தொடக்கமாகவும் இது இருக்கலாம் என்று வரும் செய்திகளையும் அத்தனை எளிதாக ஒதுக்கிவிடமுடியவில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in