‘பாஜகவில் சேருங்கள்; இல்லையெனில் புல்டோசர் வரும்’

ம.பி அமைச்சரின் பகிரங்க மிரட்டல்!
கோப்பு படம்
கோப்பு படம்

’பாஜக-வில் சேர்ந்து விடுங்கள். இல்லையெனில் உங்களை முதல்வரின் புல்டோசர் பார்த்துக்கொள்ளும்’ என்று எதிர்க்கட்சியினருக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கும் மத்திய பிரதேசம் மாநிலத்தின், பாஜக அமைச்சரின் வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் பாணியில், ம.பியிலும் புல்டோசர் அரசியல் நிலைகொண்டுள்ளது. சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானோரின், வீடு உள்ளிட்ட சொத்துக்களை புல்டோசர் கொண்டு இடித்துத்தள்ளும் இந்த நடவடிக்கை, எதிர்க்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

மகேந்திர சிங் சிசோடியா
மகேந்திர சிங் சிசோடியா

புகார் தொடுப்பு, காவல்துறை மற்றும் நீதித்துறை விசாரணைகள் என எதுவுமின்றி, எதிர்தரப்பினர் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளாவோரின் சொத்துக்களை இடித்துத்தள்ளும், புல்டோசர் அஸ்திரம் அங்கே வேலையும் செய்கிறது. இதன் மத்தியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான மகேந்திர சிங் சிசோடியா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

“காங்கிரஸ் கட்சியினர் கவனத்துக்கு. 2023 தேர்தலிலும் பாஜகவே மாநிலத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறது. எனவே மெல்ல பாஜக பக்கம் சேர்ந்து கொள்ளுங்கள். அல்லாது போனால் எங்கள் முதல்வர்களின் புல்டோசர்கள் தயாராக இருக்கிறது” என்னும் பொருளில் அவர் பேசியதற்கு, கட்சியினர் ஏகோபித்த கைத்தட்டலுடன் வரவேற்பு விடுக்கின்றனர்.

இதற்கு எதிர்வினையாற்றிய மபி காங்கிரஸார், ’அமைச்சரின் பேச்சு பாஜகவினரின் அதிகார ஆணவத்தை காட்டுகிறது. இதற்கு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும், எதிர்வரும் சட்டப்பேரவை மக்கள் பதில் அளிப்பார்கள்’ என்று பதில் தந்துள்ளனர். மபி அமைச்சரின் புல்டோசர் மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in