திரிபுராவில் மற்றொரு பாஜக எம்எல்ஏ ராஜினாமா: ஆளும் பாஜக கூட்டணிக்கு முற்றும் நெருக்கடி

திரிபுராவில் மற்றொரு பாஜக எம்எல்ஏ ராஜினாமா: ஆளும் பாஜக கூட்டணிக்கு முற்றும் நெருக்கடி

திரிபுரா பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ராங்கவால் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இவருடன் சேர்த்து இதுவரை இந்த ஆண்டில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தலாயில் உள்ள கரம்செரா தொகுதியைச் சேர்ந்த பழங்குடியின எம்.எல்.ஏ.வான ஹ்ராங்கவால் இன்று ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தி சபைக்கு வராததால், எனது எம்எல்ஏ பதவியின் ராஜினாமா கடிதத்தை சட்டசபை செயலரிடம் இன்று அளித்துள்ளேன். எனது தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளேன். எனது அடுத்த நடவடிக்கைகள் குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் நான் ஒரு அரசியல்வாதி என்பதால் வெளிப்படையாக அரசியலில் இருப்பேன்” என தெரிவித்தார். மாநில காங்கிரஸின் தலைவராக இருந்த ஹ்ராங்கவால், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு தாவினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த திரிபுரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆசிஷ் குமார் சாஹாவும், இன்று ஹ்ராங்கவாலுடன் சட்டசபைக்கு வந்தார். இதன் மூலமாக அவர் காங்கிரஸில் இணைவார் என்ற யூகங்கள் எழுந்துள்ளது.

ஹ்ராங்கவாலின் ராஜினாமாவுடன் சேர்த்து இந்த ஆண்டு பாஜக தனது நான்கு எம்எல்ஏக்களை இழந்துள்ளது. சாஹாவைத் தவிர, பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களான சுதிப் ராய் பர்மன் மற்றும் பர்போ மோகன் திரிபுரா ஆகியோரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜினாமா செய்தனர். சுர்மா தொகுதி எம்எல்ஏ ஆசிஷ் தாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (IPFT) கட்சியும் அதன் மூன்று எம்எல்ஏக்களையும் இழந்துள்ளது. தனஞ்சோய் திரிபுரா, பிரிஷாகேது டெபர்மா மற்றும் மேவர் குமார் ஜமாதியா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதில் தனஞ்சோய் திரிபுரா மற்றும் மேவர் குமார் ஜமாத்தியா ஆகியோரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார், ஆனால் "செயல்முறை தவறு" காரணமாக பிரிஷகேது தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரவர்த்தி, “ஹ்ராங்கவால் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரால் தனது பணிகளைச் செய்ய முடியவில்லை என்றும் கூறினார். அவரின் விலகலால் சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றி பாதிக்காது” என்று கூறினார். திரிபுரா சட்டசபைக்கு 2023ம் ஆண்டு தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில் தற்போது பாஜகவுக்கு 34 எம்எல்ஏக்களும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டிக்கு 5 எம்எல்ஏக்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு ஒரு எம்எல்ஏவும், சிபிஎம் கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும் உள்ளனர், ஐந்து இடங்கள் காலியாக உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in